எத்துயர் வரினும் தன் துயர் மறைத்து மாணவர் முன்னேற அயராது உழைப்போம்!

ஆசிரியர்களின் மனக்குமுறல் நியாயமானதுதான்.

இந்தியர்கள் தங்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதில்தான் ஆர்வம் காட்டுகின்றனர்.

அதேபோல் பள்ளிகளிலும் மாணவர்கள் சுதந்திரம், உரிமை என்ற பெயரில் சிலர் தறுதலைகளாக வளருகிறார்கள்.
கண்டித்து வளர்க்க வேண்டிய பெற்றோர் தங்கள் கடமையை மறந்துவிட்டனர்.தட்டிக்கேட்டுத் தண்டித்து திருத்த ஆசிரியர்களுக்கும் உரிமையில்லை.
இப்படியே போனால் காட்டுமிராண்டிகளின் நாடாகத் தமிழ்நாடு மாற வாய்ப்புண்டு.
ஒழுக்கமில்லாத கல்வியால் நாட்டுக்கும் வீட்டுக்கும் பயனில்லை.
எதிர்கால சமுதாயம் மாணவர்கள் கையில், மாணவர்கள் வளர்வது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கையில் உள்ளது.

ஆசிரியர்களே, மனம் தளராதீர்கள். நல்ல குடிமக்களை உருவாக்குவது நம் கையில்தான் உள்ளது.
ஆம். ஆசிரியர்களாகிய நாங்கள் மனம் தளராமல்தான் இருக்கிறோம்.
எங்கள் கடமையைச் செவ்வனே ஆற்றிக்கொண்டுதான் இருக்கிறோம்.
ஆசிரியர்களில் சிலர் தவறிழைப்பது உண்மைதான். அதை பொதுமைப்படுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்.
மாணவர்கள் சுதந்திரம் பேசப்படும்போது,
ஆசிரியரின் வகுப்பறைச் சுதந்திரத்திற்கு தடை போடக்கூடாது.

சில ஆசிரியர்களின் தவறுக்கு பெரும்பாலான ஆசிரிய சமுதாயம் தண்டிக்கப்படுவது எவ்வகையில் நியாயம்?
பெற்றோர் தன் கடமையை ஆசிரியர் மேல் சுமத்துவர்.
மாணவன் தன் இயலாமைக்கு ஆசிரியர் காரணம் என்பர்.

நல்ல சமுதாயம் உருவாக்குவது ஆசிரியர் கடமை என்பர் அரசியல்வாதிகள்.
மாணவர்களை அன்பால் அரவணைத்து அவர்களைத் திருத்த வேண்டும் என்பர் அதிகாரிகள்.
தபேலாவிற்கு ஒரு பக்கம் அடி.
மிருதங்கத்திற்கு இருபக்கம் அடி.
ஆசிரியருக்கு பக்கமெல்லாம் அடி.
ஆசிரியர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவர் என அடித்துக்கொண்டே இருக்கக்கூடாது.
எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, பொறுத்துக்கொண்டு, மாணவர் முன்னேற்றமே குறியாகக் கொண்டும் உழைக்கும் முகம் தெரியாத, முகம் காட்ட விரும்பாத ஆசிரியர்களே மிக அதிகம்.
சமுதாயம் சீர்பட்டுவிடக்கூடாது என திட்டமிட்டு பலர் செயலாற்றிக்கொண்டு இருக்கும்போது, அவர்களுக்கு ஈடுகொடுத்து, அவர்கள் எண்ணத்தைத் தவிடுபொடியாக்க அயராது உழைக்கும் ஆசிரியர்களுக்கு நல்வணக்கம்.

எத்துயர் வரினும்
தன் துயர் மறைத்து
மாணவர் முன்னேற அயராது உழைப்போம்.
சிவ. ரவிகுமார்.

Share this