பள்ளிக்கல்வி இயக்குநர் கார்மேகம் ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வுதமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ்.கார்மேகம் உட்பட 4 உயர் அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரிகள் யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும், குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக துணை ஆட்சியர் பணியில் சேருவோர், மாவட்ட வருவாய் அதிகாரி ஆகி அதன்பிறகு குறிப்பிட்ட ஆண்டுகளில் ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் சிறந்த அதிகாரிகள் (வருவாய்த்துறைஅல்லாத பிரிவு) தேர்வு செய்யப்பட்டு, யுபிஎஸ்சியின் சிறப்பு நேர்முகத் தேர்வு மூலம் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகின்றனர்.அந்த வகையில், தமிழகத்தில் 2016-ம் ஆண்டுக்கான வருவாய்த் துறை அல்லாத பிரிவு ஒதுக்கீட்டின்கீழ் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ்.கார்மேகம், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் கே.மேகராஜ், கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளர் எம்.பி.சிவனருள், பதிவுத் துறை கூடுதல் ஐஜி டி.ரத்னா ஆகிய 4 பேரை ஐஏஎஸ் அதிகாரிகளாக தேர்வு செய்து யுபிஎஸ்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ள கார்மேகம் (52), தற்போது பள்ளிசாரா மற்றும்வயது வந்தோர் கல்வி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
1997-ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நேரடியாக மாவட்டக் கல்வி அதிகாரி (டிஇஓ) பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். கரூர், தஞ்சாவூர், திருச்சியில் மாவட்ட கல்வி அதிகாரியாகவும்,சேலம், கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாகவும், பள்ளிக்கல்வி, ஆர்எம்எஸ்ஏ, மெட்ரிக்குலேஷன்இயக்ககத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றி இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். பின்னர் தமிழ்நாடு பாடநூல் கழக செயலாளராகவும், தொடக்கக் கல்வி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார்.

Share this