அதிவேக 'பைபர் ஆப்டிக்கல்' : இணைய சேவை: அமைச்சர் தகவல்

 ''தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் அதிவேக 'பைபர் ஆப்டிக்கல் பிராட்பேன்ட்' இணைய சேவை வழங்கப்படும்,'' என, மதுரையில் இந்திய தொழிற் கூட்டமைப்பு சார்பில் நடந்த 'கனெக்ட் மதுரை' தொழில் கருத்தரங்கில் அமைச்சர் மணிகண்டன் பேசினார்.
அவர் பேசியதாவது: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக சென்னை, மதுரை உட்பட முக்கிய நகரங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசு சேவைகளும் ஒரே இணைய போர்டலில் வழங்கப்படும். முதற்கட்டமாக தற்போது 300 சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு 2017 - 18ல் ஐந்து லட்சத்து 43 ஆயிரத்து 245 லேப்டாப்கள் வழங்கப்படும். 1436 கி.மீ., வரை ரோடு மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில் தொழில்துறை வளர்ச்சி அடைய 'திறமையாளர்கள் மையம்' ஒன்றை துவங்க திட்டமிட்டுள்ளோம், என்றார்.பின் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''மதுரை வட பழஞ்சியில் ஆறு மாதங்களில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணி முடியும். அ.தி.மு.க., அரசு ஆறு மாதங்களில் கலையும் என கூறும் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், தினகரன் பதவி வெறிபிடித்தவர்கள். ரஜினி, கமல் படத்தில் நடித்ததை தவிர மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. திரையில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்,'' என்றார்.அரசு முதன்மை செயலாளர் ராமச்சந்திரன், சி.ஐ.ஐ., மாநில கவுன்சில் தலைவர் ரவிச்சந்திரன், கிளை தலைவர் சீனிவாசவரதன், துணைத் தலைவர் ராஜ்மோகன், எச்.சி.எல்., தலைமை அதிகாரி சுப்புராமன் பங்கேற்றனர்.

Share this