ஓடி விளையாடாதே பாப்பா
ஓடி விளையாடாதே பாப்பா
இந்த உலகில்லை உனக்கு காப்பா
சினேக பார்வை கண்டு மயங்காதே
தாத்தா தானே என சிரிக்காதே
பாவிகள் சூழ் உலகடி பாப்பா
அப்பனுங்கூட சிலவிடங்களில் இருக்கிறான் தப்பா
உடலைப் பற்றி நிறைய நீயறி
நிரம்பிக்கிடக்குது இங்கு நிறைய காமக்குள்ளநரி
தோள்தொடும் நாய்களும் தோழமை காட்டாது
நீ கதறி அழுதாலும் துடியாய் துடித்தாலும்
இளம்பிஞ்சு நீயென தயவு காட்டாது
உச்சிமுகர்வதும் உன்னை பிச்சி எறியவே
நச்சுப்பேய்களை இனங்காணு பாப்பா
இல்லையேல்
அஞ்ச அஞ்ச உனை இணங்க வைப்பர் பாப்பா
பரிவு பாசமென மயக்கும் வார்த்தைகளில் மலிந்து போகாதே
ஓணாய் கூட்டத்திடம் வீணாய் சிக்கி உயிர்வதையாதே
ஏதாயிருந்தாலும் தாயிடம் சொல்லு
ஆணென்கையில் ஓர் ஐந்தடி தள்ளியே நில்லு
காறி உமிழும் திறனுனக்கில்லை
காயம் தாங்கும் வயதுனக்கில்லை
வாயைப்பொத்தி ருசிகாணும் நாய்கள்முன்னே உனதுயிரின் அலறல் பெரிதாய் இல்லை
ஆதலால்
நீ
ஓடி விளையாடாதே பாப்பா
இந்த பாதக உலகில்லை பாதுகாப்பா
சீனி.தனஞ்செழியன்
முதுகலைத்தமிழாசிரியர்,
அஆமேநிப,திருவலம்-632515
True
ReplyDeleteஎதார்த்த உண்மை .நெஞ்சை கணக்க வைத்த கவிதை .
ReplyDelete