Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நெல்லை பள்ளி தீ விபத்து எதிரொலி: பள்ளிப் பாதுகாப்பு குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அதிரடி உத்தரவு

நெல்லை ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன்
பள்ளியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டதில் மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து பள்ளிகள் பராமரிப்பு, பாதுகாப்பு குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் சார்பில் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை நெல்லையில் உள்ள ரோஸ்மேரி எனும் தனியார் பள்ளியின் ஸ்டோர் ரூமில் இருந்து திடீரென கரும்புகை வரத் தொடங்கியதையடுத்து அந்த ஸ்டோர் ரூமை ஒட்டியுள்ள 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்கள் வெளியே ஓடி வந்தனர். ஸ்டோர் ரூமில் ஏற்பட்ட தீ வகுப்பறைகளுக்கும் பரவியது
இதையடுத்து பள்ளியில் இருந்த அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக பள்ளியின் மற்றொரு வளாகத்துக்கு மாற்றப்பட்டனர். இரண்டு வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மிகுந்த போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தனர்.
பள்ளியில் உள்ள தீயணைப்பு உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததால், தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதாக புகார் எழுந்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்ட 14-ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்ட சில நாட்களில் இந்த விபத்து நடந்தது. இதில் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் மாணவர்கள் தப்பித்தனர். இதையடுத்து இந்தப் பிரச்சினையை கடுமையாகப் பார்த்துள்ள பள்ளிக் கல்வித்துறை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்கம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரின் அறிவிப்பு வருமாறு:
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 18 அன்று காலை 11.30 மணியளவில் பள்ளியின் இரண்டாவது தளத்தில் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் அது தொடர்புடைய மூலப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டது.
பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான அறிவுரை வழங்கப்பட்டும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது பள்ளியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பள்ளி நிர்வாகம் கொண்டுள்ள மெத்தனப் போக்கும், அலட்சியமும் தெரிய வருகிறது.
மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தும் இது போன்ற நிகழ்வுகள் இனி வருங்காலங்களில் ஏற்படாத வண்ணம் பள்ளிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து செயல்பட கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
* பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் அது தொடர்புடைய மூலப் பொருட்கள் பாதுகாப்பான இடத்தில் பள்ளிக் கட்டிடத்திற்கு வெளியே வைக்கப்பட வேண்டும். மேற்கண்ட மூலப் பொருட்களின் இருப்பு விவரத்தினை பள்ளியின் முதல்வர் வாரம் ஒரு முறை உரிய பதிவேட்டில் சரிபார்த்து, அப்பொருட்கள் வைக்கப்பட்ட இடம் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்திட வேண்டும்.
* வேதியியல் ஆய்வுக்கூடத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் இருக்கும் இடத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதுடன், அதன் இருப்பு விவரத்தினை உரிய பதிவேட்டில் ஆய்வு செய்து அதன் பொறுப்பாசிரியர் முனைப்புடன் செயல்படுவதை பள்ளி முதல்வர் உறுதி செய்திட வேண்டும்.
* மாணவர்களின் வகுப்பறைக்கு அருகாமையில் இதுபோன்ற மூலப் பொருட்கள் வைத்திடல் கூடாது. வேதியியல் ஆய்வகத்திற்கு எரிவாயு இணைப்பு அளிக்கப்பட்டிருப்பின், எரிவாயு உருளை ஆய்வகத்திற்கு வெளியே பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.
* கழிவறை சுத்தம் செய்யும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும்.
மேற்கண்ட மூலப்பொருட்கள் மற்றும் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை பூட்டிய சீல் இட்ட அறையில் தான் வைத்திருக்க வேண்டும்.
* பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
* பள்ளியில் உள்ள கழிப்பறைகளைச் சுத்தம் செய்திடவும், உடைந்த நிலையில் உள்ள கழிப்பறைகளைச் சரிசெய்து மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைத்திட வேண்டும். பள்ளி வளாகத்தில் புதர், கற்குவியல்கள் மற்றும் கழிவுப் பொருட்களின் குவியல்கள் இல்லாதவாறு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
* கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கழிவு நீர்த் தொட்டி ஆகியவை முறையாக மூடப்பட்டு, அதனைப் பூட்டியிருக்க வேண்டும். பள்ளியில் உள்ள மின் இணைப்புகளை பராமரித்து அவற்றை மாணவர்கள் அணுகாதவாறு பாதுகாப்பான முறையில் மூடி வைத்திட ஏற்பாடுகள் செய்திடல் வேண்டும்.
மேலும் பள்ளியில் உள்ள மின் இணைப்புகளை உரிய நேரத்தில் தேவைக்கு ஏற்ப பாதுகாப்பு ஆய்வு செய்திடல் வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் காய்ந்த (அல்லது) பட்டுபோன மரங்கள் இருப்பின் அதனை உரிய அனுமதி பெற்று அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட அறிவுறைகள் அனைத்து மெட்ரிகுலேஷன்/ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி பள்ளி முதல்வர்களின் ஒப்புதல் பெற்று கோப்பில் வைக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், மாவட்ட கல்வித்துறை ஆய்வு அலுவலர்கள் தங்களது பள்ளி ஆய்வு மற்றும் பள்ளி பார்வையின் போது மேற்கண்ட அறிவுரைகளை பள்ளி நிர்வாகம் பின்பற்றப்படுவதை உறுதி செய்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வி இயககுநர், தொடக்கக் கல்வி இயக்குநர் பார்வைக்கும் அனுப்பப்பட்டுள்ளது





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive