''இன்ஜினியரிங் படிப்புக்கான ஆன்லைன் கவுன்சிலிங்கிற்கு, தனியார் இணையதள மையங்களை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்,''
என, இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தும்முறை, மாணவர்கள் அவற்றில் பதிவு செய்வதற்கான வசதிகள் குறித்து, தமிழ்நாடு இன்ஜி., சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ், நேற்று நிருபர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், விண்ணப்ப பதிவு மற்றும், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை முடிந்துள்ளன. மாணவர்களின் தரவரிசை அடிப்படையில், ஐந்து பிரிவுகளாக, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. தரவரிசையில் முன்னிலை இடம் பெறும், 15 ஆயிரம் பேர், முதல் பிரிவு கவுன்சிலிங்கில் பங்கேற்பர்.அடுத்த, 15 ஆயிரம் பேர் இரண்டாம் பிரிவிலும், மீதம் உள்ளவர்கள், அடுத்தடுத்த மூன்று பிரிவுகளிலும் பிரிக்கப்பட்டு, கவுன்சிலிங் நடத்தப்படும்.கவுன்சிலிங்கில், ஆன்லைனில் விருப்பமான பாடப்பிரிவு மற்றும் கல்லுாரிகளை பதிவு செய்ய, மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும். மூன்றாம் நாள் மாலை, 5:00 மணிக்கு விருப்ப பதிவுக்கான, 'போர்டல் லாக்' செய்யப்படும்.அதற்குள், மாணவர்கள் தங்கள் விருப்ப பதிவை பதிவு செய்து விட வேண்டும். ஒரு மாணவர் எத்தனை கல்லுாரிகள், பாடப்பிரிவை வேண்டுமானாலும், பதிவு செய்யலாம்.தரவரிசைக்கு ஏற்ப, அவருக்கான பொது ஒதுக்கீடு அல்லது இன ரீதியான ஒதுக்கீடு அடிப்படையில், இடம் உள்ள கல்லுாரிகளில், ஆன்லைன் வழியே, தானாகவே தோராயமான இட ஒதுக்கீடு வழங்கப்படும்.அதை மாணவர்கள் உறுதி செய்வது கட்டாயம். மாணவர்கள் அளித்துள்ள விருப்ப பதிவில், முன் வரிசையில் எந்த இடம் காலியாக உள்ளதோ, அதையே கணினி வழி, 'சாப்ட்வேர்' மேற்கொள்ளும்.எனவே, மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் கல்லுாரி, பாடப்பிரிவு எது என்பதை, முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும்.அடுத்தடுத்த விருப்பங்களை, அடுத்தடுத்த வரிசையில் பதிவு செய்ய வேண்டும். முதலில் உள்ள கல்லுாரியில் இடம் இல்லாவிட்டால், அடுத்த இடம் தேர்வாகும்.அதுவும் இல்லாவிட்டால், அதற்கு அடுத்த இடம் தேர்வாகும். இந்த முறையை அறிந்து, மாணவர்கள் விருப்பமான பாடம், கல்லுாரி வரிசையை மேலிருந்து கீழாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.தனியார் பிரவுசிங் மையங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் உதவி மையங்கள் வழியாக, கவுன்சிலிங் பதிவுகள் மேற்கொள்வதை, மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.மாறாக, மாநிலம் முழுவதும், 42 உதவி மையங்கள், அரசின் சார்பில் செயல்படுகின்றன. அவற்றுக்கு சென்று, பதிவுகளை மேற்கொண்டால், பாதுகாப்பானதாகவும், யாருடைய குறுக்கீடும் இன்றி இருக்கும்.பெரும்பாலும், வீட்டில் உள்ள கணினிகளில் தாங்களாகவே சுய முடிவு எடுத்து, பதிவு செய்வது சிறந்தது. உதவி மையங்களை பொறுத்தவரை, அவற்றில் தனியார் நிறுவனங்களின் குறுக்கீடுகள் கிடையாது.அண்ணா பல்கலையால் நியமிக்கப்பட்ட பணியாளர்கள், இணையதளத்தில் பதிவு செய்யும் போது, மாணவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவர்.
இவ்வாறு ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...