மீண்டும் தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு: ஓரிரு நாளில் அறிவிப்பு

நீட் தேர்வு கருணை மதிப்பெண்
தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, தமிழகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவக் கலந்தாய்வு நடைமுறைகள் மீண்டும் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1 -ஆம் தேதி முதல் 7 -ஆம் தேதி வரை நடைபெற்றது. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மூலம் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கி புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு மற்றும் தமிழகத்தில் நடைபெற்று வந்த கலந்தாய்வு என அனைத்தும் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், இவ்வழக்கை எதிர்த்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு தடைவிதித்துள்ளது. இதையடுத்து, மருத்துவக் கலந்தாய்வு நடைமுறைகள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ கூறியது:
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் கலந்தாய்வு நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்படும். அந்த உத்தரவின் நகல் கிடைத்ததும் தமிழக அரசிடம் ஆலோசனை பெற்று, சட்ட ஆலோசனைகளும் பெற்ற பின்னர் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும். இன்னும் இரு தினங்களில் ஆலோசனைகள் நிறைவடையும். திங்கள்கிழமை (ஜூலை 23) கலந்தாய்வு தேதி குறித்த தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும்.
இதற்கிடையே, அகில இந்திய அளவிலான இரண்டாம்கட்ட மருத்துவ கலந்தாய்வு முடிவுகள் வெளியீடும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த முடிவுகள் வெளியிடப்பட்டு, மீதம் உள்ள இடங்கள் தமிழக ஒதுக்கீட்டுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்தான் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கும். அரசு இடங்களுக்கான இரண்டாம்கட்டக் கலந்தாய்வையும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட கலந்தாய்வையும் ஒரே நேரத்தில் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம் என்றார் அவர்

Share this

0 Comment to "மீண்டும் தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு: ஓரிரு நாளில் அறிவிப்பு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...