துபாயில், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய, 10 வயது சிறுவனுக்கு கவுரவம் கிடைத்துள்ளது.
மேற்காசிய நாடான, ஐக்கிய அரசு எமிரேட்சில் உள்ள துபாய் நகரில், கடைகளில் பிளாஸ்டிக் பைகள் அதிகம் பயன்படுத்தப் படுவதை பார்த்த, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, பைஸ் முகமது 10, இதற்கு தீர்வு காண விரும்பினான். இதையடுத்து, ரம்ஜான் பண்டிகைக்கு, தனக்கு கிடைத்த சிறு அன்பளிப்பு தொகையை பயன்படுத்தி, மறு சுழற்சி முறையில் உபயோகிக்கும் வகையிலான பைகளை வாங்கினான்.
அவற்றை, அங்குள்ள சில கடைகளில் கொடுத்து, அந்த பைகளை உபயோகப்படுத்தும் படி கூறினான். அதற்கான எந்த ஒரு தொகையையும் பெறவில்லை. பைஸ் முகமதின் இந்த முயற்சிக்கு, அப்பகுதி வணிகர்கள் மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அவனது செயலை பலரும் பாராட்டினர்.
இது குறித்து தகவல் அறிந்த, துபாய் நகராட்சியைச் சேர்ந்த, பசுமை திட்ட அதிகாரி பைஸ் முகமதுவை பசுமை குறித்த விழிப்புணர்ச்சிக்கான துாதராக அறிவித்து, அவனை பெருமைப்படுத்தியுள்ளார். பைஸ் முகமதுவை மேலும் ஊக்குவித்தால், எதிர்காலத்தில், துபாயில் நல்ல மாற்றம் உருவாகும் என, அந்த அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.
தனக்கு கிடைத்த அங்கீகாரத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ள, பைஸ் முகமது, தொடர்ந்து, இந்த விழிப்புணர்வு பணியை மேற்கொள்ள உள்ளதாகவும், மேலும் பலரையும் இதில் ஈடுபடுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளான்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...