இணையதளத்தைப் பயன்படுத்தி கல்வி கற்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில்
இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை செயலர் த.உதயசந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், கோவையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது:
தமிழக அரசு புதிதாக வெளியிட்டுள்ள 1, 6, 9, 11 -ஆம் வகுப்புகளுக்கான
பாடநூல்களில், கணினித் தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதல்முறையாக தமிழில் அச்சிடப்பட்டுள்ள பாடநூல்கள் யாவும் ஒருங்குறி
(யூனிகோட்) முறையில் அச்சிடப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு பாடத்திலும் இணைய
வழங்கல் என்று கூறும்படி ஆசிரியர்களும், மாணவர்களும் இணையதளம் சென்று
பயன்படுத்தக்கூடிய பல்வேறு செய்திகளை இந்தப் பாடங்களில் இணைத்துள்ளோம்.
மாணவர்கள் 6 -ஆம் வகுப்பு முதலே இணையதளக் கல்வி, கணினித் தமிழ், தமிழ்
இணையம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக கணினி அறிவியல்
பாடமானது அறிவியல் பாடத்துடன் சேர்த்து கற்பிக்கப்படுகிறது.
அதேபோல், மாணவர்கள் தங்களின் பாடங்களை விடியோக்கள், புகைப்படங்கள், செயல்
விளக்கங்கள் மூலமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக விரைவுக்
குறியீடுகள் (க்யூ.ஆர்.கோடு) ஆங்காங்கே வழங்கப்பட்டுள்ளன.
விரைவுக் குறியீடுகளை பாடங்களில் வழங்கும் முயற்சியில் மகாராஷ்டிரம்,
ஆந்திரம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களும் முயற்சி செய்தாலும்
தமிழகம்தான் முதன்முதலில் அறிமுகம் செய்தது. அத்துடன் மிக அதிக அளவாக 144
பாடங்களில், 2,895 குறியீடுகளை இடம்பெறச் செய்துள்ளோம்.
மேலும், இவற்றைப் பயன்படுத்துவதிலும் தமிழகம் தற்போது முன்னோடியாக இருப்பது
தெரிய வந்துள்ளது. தேசிய அளவில் பயன்படுத்தப்படும் மொத்த விரைவுக்
குறியீடுகளில் 60 சதவீதம் அளவுக்கு தமிழகத்தின் பங்களிப்பு உள்ளது.
தமிழகத்தில் தினசரி சுமார் 2 லட்சம் மாணவர்களும், ஆசிரியர்களும் விரைவுக்
குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர். தமிழக மாணவர்களை அடுத்தடுத்த நவீன
தொழில்நுட்ப தலைமுறைகளுக்கு கொண்டு செல்வதில் பள்ளிக் கல்வித் துறை பெரும்
பங்காற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதிலும் 3 ஆயிரம்
பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்) தொடங்கப்பட உள்ளன
என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...