புதுடில்லி : குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு அதிரடி திருத்தங்களை, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா, இறுதி செய்துள்ளார். குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் பாலியல், 'வீடியோ'க்களை வைத்திருப்போருக்கு, ஐந்தாண்டுகள் சிறை தண்டனை அளிக்க, புதிய சட்ட திருத்தங்கள் வகை செய்கின்றன.
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தைகள், ஆண்டுதோறும் கடத்தப்படுவதாக வழக்குகள் பதிவாகின்றன. இவர்களில் பெரும்பாலானோர், பாலியல் ரீதியிலான கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் நோக்கில், 2012ல், சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகளின்படி, இந்த சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மரண தண்டனை :
இந்த திருத்தங்களை ஆய்வு செய்த, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான மேனகா, அவற்றை இறுதி செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து, அரசு வட்டாரங்கள் கூறியதாவது: குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளை தடுப்பதற்காக, தற்போது உள்ள சட்டத்தில் பல அதிரடி திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. குழந்தைகளை வைத்து பாலியல் வீடியோக்களை தயாரிப்போர், அவற்றை விற்பனை செய்வோர், பிறருடன் பகிர்ந்து கொள்வோர் ஆகிய அனைவருக்கும், ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க, இந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது.
குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு கடுமையான சிறை தண்டனைகளுடன், மரண தண்டனை விதிக்கும் வகையில், இந்திய குற்றவியல் சட்டத்தில், இந்தாண்டு துவக்கத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதே போன்ற திருத்தங்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டத்திலும் கொண்டு வரப்பட உள்ளன.
குழந்தைகளை பாலியல் ரீதியில் விரைவாக பக்குவமடைய செய்யும் நோக்கில், மருந்துகள் அல்லது 'ஹார்மோன்' அளிப்பதை குற்றமாக கருதி, கடும் தண்டனை அளிக்க, சட்ட திருத்தத்தில் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
20 ஆண்டுகள் :
காப்பகங்களில் உள்ள குழந்தைகள் மீது, பாலியல் ரீதியில் தாக்குதல் நடத்த அனுமதிக்கும் ஊழியர்களுக்கு, குறைந்தபட்சம், 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட உள்ளது.
புதிய திருத்தங்கள்படி, குழந்தைகளை பாலியல் செயல்களை செய்ய வைத்து, வீடியோ எடுப்பது மட்டுமே குற்றம் அல்ல; அவர்களை தவறான வகையில் சித்தரித்தாலும் குற்றமே. மேலும், குழந்தைகளின் பாலியல் படங்களை எந்த வகையில் வைத்திருந்தாலும், அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.
புதிய சட்ட திருத்தங்களுக்கு, மத்திய உள்துறை உள்ளிட்ட பிற துறைகளின் ஆதரவும் உள்ளது. இந்த சட்ட திருத்தங்கள், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளன. அனைத்து நடைமுறைகளும், துறை ரீதியில் குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டால், அடுத்த வாரம் துவங்கும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரின்போதே, புதிய சட்ட திருத்தங்களுக்கு ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது. இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...