''பொருளாதார முன்னேற்றம் காரணமாக,
ஆதிதிராவிட மக்கள் நகர்ப்புறங்களுக்கு சென்றதால், நலத்துறை பள்ளிகளில்
சேர்க்கை எண்ணிக்கை குறைந்துள்ளது,'' என, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர்,
ராஜலட்சுமி கூறினார்.சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:
தி.மு.க., - தாயகம் கவி: அரசு ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளில், சேர்க்கை மற்றும் தேர்ச்சி சதவீதம், ஆயிரக்கணக்கில் குறைந்து வருகிறது. குறிப்பாக, 10ம் வகுப்பில், 2016 - 17ல், 10 ஆயிரத்து, 891 பேர் தேர்ச்சி பெற்றனர். 2017 - 18ல், 9,856 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், நடப்பு ஆண்டில், 9,272 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சேர்க்கை மற்றும் தேர்ச்சி சதவீதம் குறைந்த காரணத்தை, அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும்.
அமைச்சர், ராஜலட்சுமி: ஜெயலலிதா செயல்படுத்திய பல்வேறு திட்டங்களால், ஆதிதிராவிட மக்கள் மத்தியில், பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், கிராமப்புறங்களை விட்டு, அவர்கள் நகர்ப்புறங்களுக்கு செல்வதால், அங்குள்ள பள்ளிகளில் சேர்க்கின்றனர்.இதனால் தான், அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் சேர்க்கை குறைந்துள்ளது.
பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன்: ஆதிதிராவிட மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து இருக்கிறது. பள்ளிகளில், கல்வித் தரம் குறையவில்லை.
உயர் கல்வித் துறை அமைச்சர், அன்பழகன்: நாட்டில் சராசரியாக, 21.1 சதவீதம், ஆதிதிராவிட மாணவர்கள், உயர் கல்வி பெறுகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, இது, 38.3 சதவீதமாக உள்ளது.இதன் மூலம், ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி குறையவில்லை என்பது தெரிகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...