புதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்த பயிற்சி புத்தகம்
ஆசிரியர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் 1, 6, 9, பிளஸ் 1 ஆகிய
வகுப்புகளுக்கான பாடத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு புதிய
பாடத்திட்டத்திலான பாடநூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து
புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் மாவட்ட வாரியாக
40,000 ஆசிரியர்களுக்கு ஜூலை 9-ஆம் தேதி முதல் ஜூலை 21 ஆம் தேதிவரை பயிற்சி
அளிக்கவுள்ளனர்.
இதற்கிடையே, புதிய பாடத் திட்டத்தின் படி இனி எப்படி பாடங்களை நடத்த
வேண்டும் என்பது குறித்த பயிற்சிப் புத்தகம் ஆசிரியர்களுக்கு
வழங்கப்படவுள்ளது. இதில், புதிய பாடத் திட்டங்களுக்கு மாணவர்களை எவ்வாறு
தயார் செய்வது, புரியும் வகையில் எப்படி பாடங்களை நடத்துவது, பயிற்சிகளை
எவ்வாறு அளிப்பது உள்ளிட்ட தீவிரமான ஆலோசனைகள், அறிவுரைகள் இருக்கும். அரசு
பள்ளி ஆசிரியர்கள் முறையான வழிமுறைகளில் பாடங்களை மாணவர்களுக்கு நடத்த
வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கையேடு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது
மாநில வழிக் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்கள் முறைப்படி கற்பிக்க உதவியாக
இருக்கும்.
பாடங்களை திட்டமிடல், வரைபடத்துடன் விளக்குதல், வகுப்புகளில் தேர்வுகள்
நடத்துதல் உள்ளிட்டவற்றை சிறப்பாகச் செய்யும் வகையிலான தகவல்கள் இந்தப்
பயிற்சி புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக, இயற்பியல்
பாடத்தை பெயரளவுக்கு நடத்தி விட்டுச் செல்லாமல், அதை தொழில்நுட்பரீதியாக
புரொஜெக்டர் மூலம் நடத்தும்போது மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்.
அவ்வாறு செய்வது எப்படி என்று இதில் கொடுக்கப்பட்டிருக்கும்.
கல்வித் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களால் எழுதப்பட்ட கையேடு என்பதால்,
ஆசிரியர்கள் திறன் மிகுந்த வகையில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கவும்
பல்வேறு நவீன புத்தாக்க முறையில் பாடங்களை நடத்தவும் உதவியாக இருக்கும்.
ஆசிரியர்களுக்கான பயிற்சிப் புத்தகத்தை புதிய பாடத் திட்ட பயிற்சியின்போது
வழங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...