தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணி நிரவல் காரணமாக பல்வேறு பள்ளிகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதனால் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.தனியார் பள்ளிகளில் சேரும் 25 சதவீத மாணவர்களுக்கு அரசாங்கமே கட்டணம் செலுத்துவது என்ற கொள்கை முடிவு காரணமாக பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். தனியார்பள்ளிகளில் கற்பிக்கப்படும் ஆங்கில வழிக் கல்வியின்மீது பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள மோகம் காரணமாக தனியார் பள்ளிகளை நோக்கி பொதுமக்களின் பார்வை திரும்பியதின் விளைவாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது.

அரசு பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, பெற்றோர்களுக்குப் புரிய வைப்பதில் கல்வியாளர்கள் மற்றும் சமூக அக்கறையுடன் கூடிய சிந்தனையாளர்களின் உதவி தேவைப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பல குறைகள் உள்ளன. அவற்றைச் சுட்டிக்காட்டி, அத்தகைய தவறுகளை சீரமைத்து வழி நடத்திச் செல்ல வேண்டியது கல்வியாளர்கள், சமூக சிந்தனையாளர்கள் ஆகியோரின் கடமையாகும். இல்லையெனில், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இலவசக் கல்வி எட்டாக்கனியாகிவிடும்.150 மாணவர்கள் வரை பயிலும் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் 6 ஆசிரியர்கள், ஒரு தலைமையாசிரியர், ஓர் உடற்கல்வி ஆசிரியர், ஓர் இளநிலை உதவியாளர், ஓர் ஆய்வக உதவியாளர், ஓர் அலுவலக உதவியாளர், ஓர் இரவுக் காவலர் கட்டாயம் தேவை. ஆயினும் பல இடங்களில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் கிடையாது. அலுவலகப் பணி செய்ய இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள்இல்லை. கல்வித்துறை இணையச் செயல்பாடுகளைச் செய்யவோ, கல்விசார் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தவோ எவரும் இல்லை. மேலும் பள்ளி சார்ந்த பலவிதமான அலுவலகப் பணி, கருவூலப் பணி, கல்வி அலுவலங்களுக்கு நேரில் சென்று கடிதங்களை ஒப்படைத்தல் பணி என பல்வேறு பணிகளையும் ஆசிரியர்களே செய்ய வேண்டியுள்ளது. தற்போதுள்ள ஆசிரியர்கள் கல்வி கற்பித்தல் பணியோடு இத்தகைய செயல்பாடுகளிலும் ஈடுபடவேண்டிய சூழ்நிலை உள்ளதால் அவர்களுடைய கற்பித்தல் பணி தொய்வடைகிறது. அவற்றைச் செய்யும் ஆசிரியர்கள் அமையாத பள்ளியும், தலைமையாசிரியரும் படும்பாடு சொல்லி மாளாது.இத்தகைய சூழ்நிலையில் குறிப்பாக, கிராமப்புறங்களில்உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள். கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பணி நிரவலை முறைப்படுத்தி மாணவர்களின் கல்வித் தரத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

150 மாணவர்கள் வரை பயிலும் உயர்நிலைப் பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் போதும் என்ற கணக்கிடப்பட்டு மற்ற ஆசிரியர் பணியிடங்கள் உபரியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் நகர்ப்புறங்களைவிட்டு வெகு தொலைவில் உள்ள பெரும்பாலான கிராமப்பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் இல்லை.பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட்டு வரப்படுகின்றனர். அவர்களுக்கான மாற்றுப் பள்ளி தேடுவதைவிட, தற்போது பணியாற்றும் பள்ளியிலேயே உரிய வகையில் பணியை பின்வருமாறு மாற்றியமைக்கலாம்.புதிய உயர்தர பாடத் திட்டத்தில், சிறப்பான வகையில் பல தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. அவற்றை நன்முறையில் வெற்றிகரமாக பயிற்றுவிக்கும் தொழில்நுட்ப ஆசிரியராக அவர்களை மிளிரச் செய்யலாம். அவர்களுக்கு கூடுதலாக பயிற்சி அளித்து அதை செயல்படுத்தலாம்.

தங்கள் பாடம் சார்ந்த கற்பித்தல் பணியோடு, கணினியை நிர்வகித்தல், கணினியை பயன்படுத்துதல், கணினியைப் பயன்படுத்த மற்ற ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துஅனைத்து ஆசிரியர்களையும் ஸ்மார்ட் டீச்சராக மாற்றுதல், கணினியை கல்வி கற்பிக்க சிறப்பாகப் பயன்படுத்துதல், மூவகைச் சான்றிதழ்களைப் பெற உதவுதல், பள்ளியின் கடிதப் போக்குவரத்துகளை இணையவழியில் செயல்படுத்துதல், பாடம் சார்ந்த ஒலிஒளி கோப்புகளை உருவாக்கி கற்றல் கற்பித்தல் நிகழ்வினை எளிமையாக்குதல், கல்விசார் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளை செயல்படுத்துதல், பள்ளி தொடர்பான அரசின் விலையில்லா திட்டங்களை திட்டமிட்டு குறையில்லாமல் பள்ளியில் செயல்படுத்துதல், பள்ளிக் கல்வி முடித்தபின் மாணவ, மாணவிகளுக்கு என்னென்ன மேல்படிப்புகள் உள்ளன, அவற்றை எங்கு கற்பது, தொழிற்கல்வி,என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன அவற்றிற்குரிய கல்வியை எங்கு பயில்வது என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளிக்கும் சமூகத்திற்கும் ஒரு தொடர்பாளராக செயலாற்றி, மாணவ, மாணவியர்களுக்கு நல் ஆலோசகராக விளங்க முடியும்.இத்தகைய ஆசிரியர்களை உருவாக்கினால் அரசு பள்ளிகளும்பன்முக வளர்ச்சியை பெறும். உபரி ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். அதனால் பணி நிரவல் தேவையிராது. இனிவரும் காலங்களில் பணி நிரவல் இல்லாமலாக்குவது அரசு, ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கையிலும்தான் உள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments