வருமான வரித் துறையின் அடுத்த இலக்கு!!

வருமான வரித் துறையின் அடுத்த இலக்கு!

நடப்பு ஆண்டில் ரூ.60,845 கோடி வரி வசூல் செய்யவிருப்பதாக
வருமான வரித் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், வரி ஏய்ப்பைத் தடுக்க வருமான வரிச் சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை வருமான வரித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். வருமான வரி வசூலில் இலக்கு நிர்ணயம் செய்து அதன்படி வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. தேசிய அளவில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு அரசின் வரி வசூலை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை உயர்த்தவும் அரசு முயன்று வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், சென்ற 2017-18 நிதியாண்டில் ரூ.11,400 கோடி வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் ரூ.10,302 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த ஆண்டில் மொத்தம் ரூ.43 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த வசூல் மகிழ்ச்சியளிப்பதாக இருப்பதாகவே சென்னை வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிதியாண்டில் தமிழகத்தில் 10,36,645 வரி செலுத்துவோரை இணைக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் கடந்த ஆண்டில் ரூ.49,775 கோடி வரியை வருமான வரித் துறை வசூலித்திருந்தது. நடப்பு நிதியாண்டில் ரூ.60,845 கோடியை வசூலிக்கவிருப்பதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 23ஆம் தேதியன்று, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கான வருமான வரித் துறை தலைமை ஆணையர் எஸ்.பி.சவுதுரி ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “2018-19ஆம் ஆண்டில், ஆந்திரா - தெலங்கானா பகுதியில் ரூ.60,845 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2017-18ஆம் ஆண்டில் ரூ.49,775 கோடி வரி வசூலிக்கப்பட்டது.
இப்பகுதியில், இதுவரை 8,13,759 புதிய ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் 10.13 லட்சம் புதிய ரிட்டன்களைப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். கடந்த ஆண்டில் ஆந்திரா - தெலங்கானா பகுதியில் 36.1 லட்சம் பேர் வரி செலுத்தியுள்ளனர். மேலும், கார்பரேட் வரி செலுத்துவோரில் அரசுக்குச் சொந்தமான என்.எம்.டி.சி லிமிடெட் மற்றும் ஆந்திரா வங்கி ஆகிய நிறுவனங்கள் முன்னிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Share this

0 Comment to "வருமான வரித் துறையின் அடுத்த இலக்கு!!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...