ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்; பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்

டெல்லியில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்பொழுது, நீட் தேர்வானது பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் கணினி முறையில் நடத்தப்படும் என கூறினார்.
தொடர்ந்து அவர், பாடத்திட்டம், தேர்வுகள் கட்டணத்தில் மாற்றம் இல்லை. தேர்வுகள் வெளிப்படையானதும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். கணினி முறையில் தேர்வு நடந்தாலும் இது ஆன் லைன் தேர்வு இல்லை.
தேர்வுகளுக்கான தேதிகள் விரைவில் இறுதி செய்யப்பட்டு விடும்.  மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் இணையதளம் மூலம் பயிற்சிகள் வழங்கப்படும்.
மாணவர்கள் கணினி அறிவுடன் இருப்பதால் தேர்வுகள் நடத்துவதில் சிரமம் இருக்காது.   தேர்வுகள் இரண்டு கட்டமாக நடப்பதால் மாணவர்கள் மொத்தமாக தேர்வு எழுதுவது தடுக்கப்படும் என கூறினார்.
இந்த நிலையில், ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என்று அமைச்சர் செங்கோட்டையன் இன்று கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு நடத்துவது பற்றி தமிழக அரசுக்கு கடிதம் வரவில்லை.
ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.  இதுபற்றி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என தெரிவித்துள்ளார்.

Share this