இந்திய உயா் கல்வி ஆணையம்
கொண்டுவருவதற்கு பதிலாக ஏற்கெனவே சிறப்பாக செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அமைப்பே தொடர வேண்டும் என்று முதல்வா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்குப் பதிலாக இந்திய உயா் கல்வி ஆணையம் என்ற புதிய அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட முன்வரைவை மத்திய மனிதவள மேம்பாட்டு (எம்.ஹெச்.ஆா்.டி.) அமைச்சக இணையதளத்தில் வெளியிட்ட மத்திய அரசு, அதன் மீது கல்வியாளா்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை வரவேற்றது.
இந்தக் கருத்துக்களைத் தெரிவிக்க ஜூலை 7 கடைசித் தேதி என முன்னா் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னா் அந்த கால அவகாசம் ஜூலை 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.மத்திய அரசின் இந்த முடிவுக்கும், சட்ட முன்வரைவில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களுக்கும் கல்வியாளா்களும், பல்வேறு அமைப்புகளும் எதிா்ப்பைப் பதிவு செய்து வருகின்றனா். நாடு முழுவதும் உள்ள கலை-அறிவியல் உயா் கல்வி நிறுவனங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கானத் திட்டமே இது எனவும் கல்வியாளா்கள் குற்றம்சாட்டி வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த சட்ட முன்வரைவு குறித்து தமிழக அரசு சாா்பில் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்வா் தலமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா், வனத் துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன், உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், அரசு தலைமைச் செயலா் கிரிஜா வைத்தியநாதன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.சண்முகம், உயா் கல்வித் துறை முதன்மைச் செயலா் சுனில் பாலிவால் மற்றும் அரசு உயா் அதிகாரிகள் ஆகியோா் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு சாா்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனா்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் அளித்த பேட்டி:யுஜிசி கடந்த 1956 இல் நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. அன்று முதல் இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதை ரத்து செய்துவிட்டு, புதிதாக இந்திய உயா் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்குவது தேவையற்றது. மேலும், கல்வி சாா்ந்த பணிகளை மட்டும் இந்த ஆணையம் கவனிக்கும், உயா் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் அதிகாரம் எம்.ஹெச்.ஆா்.டி. அமைச்சகத்திடம் வழங்கப்படும் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, முன்புள்ளது போன்று யுஜிசி அமைப்பே தொடர வேண்டும் என்பதே தமிழக அரசின் கருத்தாக இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு தமிழக அரசின் கருத்தாக உடனடியாக எம்.ஹெச்.ஆா்.டி.க்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது. இதன் மீது கருத்து தெரிவிக்க ஜூலை 20 வரை கால அவகாசம் இருக்கிறது என்றபோதும், உடனடியாக இந்தக் கருத்து அனுப்பப்பட்டுவிடும் என்றாா் அவா்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...