4-ஆவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்: 109 பேர் மயக்கம்

சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள்
4-ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
தமிழக அரசு பள்ளிகளில் 2009-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதன்பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு காணப்படுகிறது. இதனால் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் கடந்த திங்கள்கிழமை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். அவர்களை போலீஸார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் தங்க வைத்தனர்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக டிபிஐ வளாகத்தில் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். புதன்கிழமை மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இதில் மொத்தம் 65 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதுவரை 109 ஆசிரியர்கள் போராட்டத்தில் மயக்கமடைந்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்- டிடிவி தினகரன்: உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் புதன்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ஒற்றைக் கோரிக்கையுடன் மன உறுதியோடு போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் நிலை குறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும். ஜனநாயக ரீதியான இதுபோன்ற போராட்டங்களை முறையான பேச்சுவார்த்தை மூலம் நேர்மையான தீர்வு காண வேண்டும். இந்தப் பிரச்னையில் முதல்வர் உடனடியாகத் தலையிட்டு ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தை இழுபறி: போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினருடன் கல்வித்துறை அதிகாரிகள் மூன்றாவது முறையாக புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊதிய முரண்பாடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரை ஜன.5-ஆம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜன.7-ஆம் தேதி நீதிமன்றத்தில் அந்த அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளோம். எனவே தற்போது போராட்டத்தை கைவிட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த ஆசிரியர் சங்கத்தினர், கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக எழுத்துபூர்வ உறுதிமொழி தேவை என வலியுறுத்தினர். ஆனால் அதற்கு அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது

Share this

0 Comment to "4-ஆவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்: 109 பேர் மயக்கம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...