தங்கநகைக் கடன் குறித்து பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

கடன் பெறுவோர் மட்டுமின்றி, தங்கநகைக்
கடன் கொடுப்போரும் இதை மிகவும் பாதுகாப்பான கடன் முறையாகக் கருதுகின்றனர். தனிநபர் கடன் மற்றும் வீட்டுக் கடன் போல இல்லாமல் தங்கநகைக் கடன் மிகவும் உத்தரவாதம் உள்ளதாகக் கருதப்படுகிறது. கடன் தருபவர்கள் தங்கள் பணம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கலாம். காரணம், கடன் பெற்றவரின் நகை அவர்கள் கையில் உள்ளது.


எனவே எளிதில், உடனடியாகக் கடன் பெற விரும்புவோர், தங்களிடம் உள்ள நகை, தங்க நாணயங்கள் அல்லது தங்கக் கட்டிகளை வங்கியில் அல்லது தங்கநகைக் கடன் நிறுவனத்தில் கொடுத்து கடன் பெறலாம். பெற்ற கடன் தொகையைத் திருப்பிக் கொடுத்தவுடன் நகையை திருப்பித் தந்துவிடுவர்.தங்கநகைக் கடனில் உள்ள மிகப் பெரிய அனுகூலம், கடன் வாங்குவதற்கான செயல்முறை மிகவும் எளிது என்பதும், இது குறைந்த காலத்துக்காகப் பெறப்படும் கடன் என்பதும் ஆகும். தங்கநகைக் கடன் பெற ஒருவர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அவரிடம் தங்கம் சொந்தமாக இருக்க வேண்டும்.நம்மிடம் தங்கநகை இருக்கிறது, பணம் அவசர, அவசியத் தேவையாக இருக்கிறது என்றால், தங்க நகைக் கடன் விரும்பத்தக்கதது. காரணம், இதற்கான வட்டி விகிதம் இதற்கு இணையான கடன்களின் வட்டி விகிதத்தைவிட மிகக் குறைவு. அதுபோக கடனின் கால அளவு மிகவும் நெகிழ்வானது. அதாவது, சில நாட்களில் இருந்து ஓராண்டு வரை.தங்கநகைக் கடனுக்கு எந்த வங்கிக் கட்டணமும் கிடையாது. தவிர, இதற்கு மிகக் குறைந்த அளவிலான ஆவணங்கள்தான் தேவைப்படும். ஆனால், என்னதான் தங்கநகைக் கடன் மற்ற கடன்களைவிடக் கவர்ச்சியாக இருந்தாலும், இக்கடன் வாங்கும் முன் நீங்கள் சில விஷயங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, அடகு வைத்த தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சமாக 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும். இந்த சதவீதம், வங்கிகள், நிதி நிறுவனங்களைப் பொறுத்து மாறலாம். பெரும்பாலும் தங்கநகைக் கடன் வழங்குபவர்கள் இதற்கு செயல்முறைக் கட்டணம் வசூலிக்கமாட்டார்கள். ஆனால், மதிப்பீட்டுக் கட்டணம் உண்டு. இந்தக் கட்டணம் அதிகமாக இருந்தால் நீங்கள் வேறு நிறுவனங்களை நாடலாம்.
மற்ற 'செக்யூரிட்டி' இல்லாத மற்றும் பலவகை 'செக்யூரிட்டி' உள்ள கடன்களைவிட தங்கநகைக் கடன்கள் எளிதில் கிடைக்கும். நீங்கள் கடன் பெறும் நிறுவனத்தைப் பொறுத்து அதற்கு உண்டான வட்டியை ஒரு மாதம் அல்லது மூன்று மாதத்துக்கு ஒருமுறை செலுத்திக் கொள்ளலாம். இறுதியில் கடன் கால அளவு முடிவுக்கு வரும்போது அசலை திருப்பிச்செலுத்த வேண்டும். கடனுக்கு விண்ணப்பித்த உடன் மிக விரைவில் உங்களுக்குப் பணம் கிடைக்கும்.
தங்கத்தின் மூலம் கடன் வாங்குவதற்கு முன்னால் ஒன்றுக்குப் பத்து இடத்தில் விசாரியுங்கள். நீங்கள் அடகு வைக்கப்போகும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் தங்கத்தின் தரத்தையும் அறிந்துவைத்துக் கொள்ளுங்கள். தங்கநகையை வைத்துக் கடன் பெறுவோர், தவறாமல் வட்டி செலுத்தி, உரிய காலத்தில் அதை மீட்டுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நகை 'மூழ்கிப் போகும்' நிலை ஏற்படலாம்.

Share this