Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வுக்கு என்ன அவசரம் ? கல்வியாளர்களின் கருத்து!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தன் கோரத் தாண்டவத்தைத் தொடங்கிய "கஜா' புயல், மேலும் ஆறு மாவட்டங்களை முற்றிலுமாக அழித்தொழித்துள்ளது. விவசாயிகள், மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்வாதாரங்களையும் வாரி சுருட்டிச் சென்ற இந்தப் புயல், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான மக்களை சொந்த ஊரிலேயே அகதிகளாக்கியுள்ளது.
 புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில், காகிதங்களைப் போல கிழித்து வீசப்பட்ட குடிசைகள், சுவர்களை இழந்த வீடுகள், மேற்கூரைகளை இழந்த வீடுகள், முறிந்து சாய்ந்த மரங்கள், அறுந்து தொங்கும் மின்கம்பிகள், மறைந்து போன சாலைகள், முறிந்த மரங்களுக்கு முட்டுக் கொடுத்து நிற்கும் கட்டடங்கள், வானமே கூரையான பள்ளிகள் என்ற அலங்கோலமான காட்சிகள், "கஜா' புயல் கடந்துச் சென்ற பாதைகளுக்கு சாட்சிகளாக உள்ளன.
 புயலால் பாதிக்கப்பட்டு 15 நாள்களுக்கும் மேலாகியும் இன்னும் பல ஊர்களில் மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை, வீடு இல்லை, உணவுக்கு வழியில்லை, மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் இல்லை, பள்ளிகள் திறக்கப்படவில்லை, சாலைகள் இல்லை, பெயரளவுக்குத் திறக்கப்பட்ட பள்ளிகளிலும் மாணவர்களின் வருகை பாதிகூட இல்லை - இப்படிப் பல இல்லைகள் நிறைந்துள்ள நிலையில்தான், "அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி டிசம்பர் 17 முதல் நடைபெறும்' என அறிவித்துள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.
 அடிப்படைத் தேவைகளான இருப்பிடம், உடை, உணவு என்ற அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் இழந்து, சொந்த ஊரிலேயே உணவுக்குக் கையேந்தும் நிலையில், தனது தாயும், தந்தையும், உடன் பிறந்தவர்களும் பரிதவித்து வருவதைக் காணும் எந்த மாணவனால் கல்வியில் கவனம் செலுத்த முடியும் ? எப்படி அவர்களால் தேர்வை சந்திக்க முடியும் ?
 "புயல் நிவாரணம்' என்ற பதாகையுடன் வரும் வாகனங்களின் வருகையை எதிர்பார்த்து, சாலையோரங்களில் கையேந்தி நிற்கும் கூட்டத்தில், மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையில் மாணவர்களே உள்ளனர். இந்த நிலையில், அனைத்துப் பகுதிகளிலும் அரையாண்டுத் தேர்வு என்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 திட்டமிட்டப்படி இன்னும் இரண்டு வாரத்தில் அரையாண்டுத் தேர்வுகளை பள்ளிக் கல்வித்துறை நடத்தலாம். வெற்றிகரமாக தேர்வுகளை முடித்து விட்டோம் எனக்கூறி, அரசின் சாதனைகளில் ஒன்றாக பெருமிதப்பட்டுக் கொள்ளலாமே தவிர, அதனால் மாணவர்களுக்கு எந்தப் பயனும் இருக்காது.
 கல்வி என்பது அறிவு, நல்லொழுக்கம் ஆகியவற்றை வளர்க்கும் முக்கிய காரணி. தேர்வுகளும் மதிப்பெண்களும் மட்டுமே நல்ல மாணவர்களை உருவாக்குவதில்லை என்பதுதான் வாழ்வியல் உணர்த்தியுள்ள பாடம். இந்த நிலையில், புயல் ஏற்படுத்திச் சென்ற கடுமையான பாதிப்புகளைக் கருத்தில் கொள்ளாமல், அனைத்துப் பகுதிகளுக்கும் அரையாண்டுத் தேர்வு என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருப்பது, பாதிக்கப்பட்ட பகுதிகளின் கள எதார்த்தத்தை அரசு இன்னும் முழுமையாக உணரவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
 புயலின் கோரத் தாண்டவத்தால் ஏற்பட்ட உயிர் பயம், வீட்டை இழந்த தன் குடும்பம் வீதிக்கு வந்த அவலம் ஆகியவற்றை கண்ணால் கண்டு, உடலாலும், மனதாலும் கஷ்டங்களை அனுபவித்து, பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள மாணவர்களை, மனத்தளவில் புத்தாக்கம் பெறச் செய்யும் கலந்தாய்வுகள்தான் தற்போதைய தேவையே தவிர, அரையாண்டுத் தேர்வு அல்ல.
 அரையாண்டுத் தேர்வு என்பது பொதுத் தேர்வு அல்ல; மாணவர்களின் கல்வியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் இறுதிப் பருவத் தேர்வும் அல்ல. இந்நிலையில், அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை பிடிவாதம் பிடிப்பது, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி விட்டது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுள் ஒன்றாகதான் கருத வேண்டியுள்ளதே தவிர, மாணவர்களின் கல்வி மீதான அக்கறையாகத் தெரியவில்லை என்பதுதான் மக்களின் கருத்து.
 புயல் பாதித்த பகுதிகளில் 15 நாள்களுக்கும் மேலாக நிலவும் மோசமான சூழல்களால் மாணவர்களின் கல்வி நிலையும், கல்வி கற்கும் மனநிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாலும், புயல் ஏற்படுத்திச் சென்ற பாதிப்புகள் இதுவரை முழுமையாக விலகாததாலும், தடைப்பட்ட கல்வியைக் கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்கும் இல்லை, அதற்கான அவகாசம் ஆசிரியர்களுக்கும் இல்லை.
 காரணம், வரும் 15 நாள்களில் அரையாண்டுத் தேர்வு தொடங்கப்பட்டால் காலையில் தேர்வு, பிற்பகலில் விடுப்பு என்ற முறையில்தான் கல்வி நிறுவனங்கள் இயங்கும். விடுப்பால், விடுபட்ட பாடங்கள், விடுபட்டதாகவேதான் இருக்கும். இதற்கு மாறாக, காலையில் தேர்வு பிற்பகலில் பாடம் என்ற முயற்சித் தொடரப்பட்டால், அது மாணவர்களுக்கு மேலும் பல பாதிப்புகளையே ஏற்படுத்தும்.
 வழக்கமாக ஜனவரி மாதம் முதல் மூன்றாம் பருவப் பாடத்திட்டம் தொடங்கப்படும். எனவே, அரையாண்டுத் தேர்வை ஒத்தி வைத்தாவது நடத்தலாம் என பள்ளிக் கல்வித் துறை அடுத்தக்கட்ட முயற்சிகளை மேற்கொண்டால், அது மூன்றாம் பருவத்துக்கான பாட நாள்களிலும், பாடங்களிலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.
 எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களைக் கல்வி கற்கும் மனநிலைக்கு மாற்றும் திட்டங்களுக்கும், அமைதியான கல்வி கற்கும் சூழலை உருவாக்கவும் அரசு கவனம் செலுத்துவதுடன், புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அரையாண்டுத் தேர்வை ரத்து செய்து, மாணவர்களை 3-ஆம் பருவத்தை நோக்கிப் பயணிக்கச் செய்வதே சரியாக இருக்கும் என்பதுதான் கல்வியாளர்களின் கருத்து.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive