என்சிஇஆர்டி குழந்தைகள் கல்வித் திருவிழா: விருதுகள் பெற்றுத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்


என்சிஇஆர்டி சார்பில் ஆண்டுதோறும் குழந்தைகளின் கல்விக்காக ஆடியோ வீடியோ ஐசிடி விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் கல்வித்துறை சார்ந்து சிறந்த 'ஆடியோ', 'வீடியோ', மற்றும் 'ஐசிடி' (தகவல் மற்றும் தொழில்நுட்பக் கலை) படைப்புகளை உருவாக்குபவர்களுக்கு விருதும் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.

குறிப்பாக ஆரம்பநிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என நான்கு பிரிவுகளில் தனித்தனியாக விருது அளிக்கப்படுகிறது. 22-ம் ஆண்டாக இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழகத்தில் இருந்து 4 ஆசிரியர்கள் விருதுகளையும், ரொக்கப் பரிசையும் பெற்றுத் திரும்பி இருக்கின்றனர். அவர்களிடம் இதுகுறித்துப் பேசினேன்.ஆசிரியை ஹேமா, அரசு மேல்நிலைப் பள்ளி, வேளச்சேரி

''அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஐசிடி தொடர்பாக ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில் 85 ஆசிரியர்கள் 3 மாதங்கள் பயிற்சி எடுத்தோம். அதன் நீட்சியாக என்சிஇஆர்டி நடத்திய விழாவில் கலந்துகொண்டோம். இதில் எங்களுக்கு விருது கிடைத்துள்ளது.அடிப்படையில் கணித ஆசிரியரான நான், 'முக்கோணவியலின் அடிப்படைக் கருத்துகள்' என்ற தலைப்பில் ஐசிடி அனிமேஷனைச் சமர்ப்பித்தேன். மற்ற பாடங்களைப் போல, கணிதத்தில் அத்தனை எளிதாக அனிமேஷன் வீடியோவை உருவாக்க முடியவில்லை. அன்றாட வாழ்க்கையில் இருந்து உதாரணங்களை எடுத்து அவற்றை கணக்கில் பொருத்தி அனிமேஷனை உருவாக்கினேன். உதாரணத்துக்கு பூவில் இத்தனை இதழ்கள் இருந்தால் என்ன கோணம், பலூன் இந்த உயரத்தில் பறந்தால் எவ்வளவு தூரம் என்று சொல்லி, முக்கோணவியலின் அடிப்படைகளை அனிமேஷன் ஆக்கினேன்.

டெல்லியில் நடைபெற்ற விழாவில் விருது பெறும் ஆசிரியை ஹேமா.இதற்கு உயர்நிலைக்கான சிறந்த ஐசிடி விருதும், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் கிடைத்தது. 19 வருடங்களாக வகுப்பறைக் கல்வியையே மாணவர்களுக்கு அளித்த எனக்கு, அனிமேஷன் வடிவில் கற்பிப்பது புத்துணர்ச்சியை அளிக்கிறது'' என்கிறார் ஹேமா.ஆசிரியை அம்பிலி, மலையாள வித்யாலயம் உயர்நிலைப் பள்ளி, புரசைவாக்கம்

''என்சிஆர்டி விழா, கடந்த நவம்பர் 27 முதல் 29-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 29-ம் தேதி நிறைவு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. 'செல் பகுப்பாய்வு' என்ற தலைப்பில் நான் பவர் பாயிண்டுகள் மூலம் அனிமேஷன் ஐசிடியை உருவாக்கி இருந்தேன். முப்பரிமாண முறையில் உருவாக்கப்பட்ட வீடியோவுக்கு ஸ்பெஷல் ஜூரி விருதும் 5 ஆயிரம் ரூபாயும் கிடைத்தது'' என்கிறார் அம்பிலி.

டெல்லியில் நடைபெற்ற விழாவில் விருது பெறும் ஆசிரியை அம்பிலி.


ஆசிரியை ஜான் ஜெரால்டின், புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, ராயபுரம்

''கணித ஆசிரியையான நான், 'நேர் மற்றும் எதிர் விகிதங்கள்' என்ற தலைப்பில் ஐசிடியை உருவாக்கி அனுப்பினேன். அடிப்படையில் கடினமான ஒன்றான இந்த விகிதாச்சாரம், அனிமேஷனில் எளிதாகப் புரிவதாக அனைவரும் பாராட்டினர். இதற்கு நடுநிலை பிரிவில் சிறந்த ஐசிடி விருதும், ரொக்கப் பரிசும் கிடைத்தது.அங்கிருந்த என்சிஇஆர்டி அதிகாரிகள் அனைவரும் தமிழகத்தில் ஆசிரியர்கள் உருவாக்கிய அனிமேஷன்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளதாகப் பாராட்டுத் தெரிவித்தனர்''.

டெல்லியில் நடைபெற்ற விழாவில் விருது பெறும் ஆசிரியை ஜான் ஜெரால்டின்.ஆசிரியர் பெர்ஜின், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சாயல்குடி

''இயற்பியல் ஆசிரியரான நான், 'பி - என் சந்தி டையோடின் உருவாக்கம்' என்ற தலைப்பில் வீடியோவைச் சமர்ப்பித்தேன். நாம் பயன்படுத்தும் அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் இந்த டையோடுதான் அடிப்படை. பி - என் குறைகடத்தியின் செயல்பாட்டில் அமைந்த இந்த வீடியோவுக்கு என்சிஆர்டியில் இருந்து உயர்நிலை பிரிவில் சிறந்த வீடியோ விருதும், 40,000 ரூபாய் பணமும் அளித்தனர்.

டெல்லியில் நடைபெற்ற விழாவில் விருது பெறும் ஆசிரியர் பெர்ஜின்.ஒவ்வோர் ஆண்டும் என்சிஇஆர்டி சார்பில் குழந்தைகளுக்காக நடத்தப்படும் இந்த விழாவில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். கல்வித்துறை சார்ந்த விழா என்பதால் பெரும்பாலும் ஆசிரியர்களே இதில் கலந்துகொள்கின்றனர். நான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த விழாவில் கலந்துகொண்டு பரிசு வாங்கிவருகிறேன். சரியான விழிப்புணர்வு இல்லாததால் இதில் குறைவானவர்களே கலந்துகொள்கின்றனர்'' என்கிறார்.


தமிழகம் சார்பில் நிறையப்பேர் இதில் பங்களித்துப் பரிசு பெற்றுத் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

Source தி இந்து

Share this

0 Comment to "என்சிஇஆர்டி குழந்தைகள் கல்வித் திருவிழா: விருதுகள் பெற்றுத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...