தமிழகத்தில் புதுமைப்பள்ளி விருதுக்கு நடப்பாண்டில் 128 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட உள்ளன.


 பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், கற்றல் திறனை மேம்படுத்துதல், புதுமையான கற்பித்தல் முறைகளை பின்பற்றுதல், அனைத்து  அடிப்படை வசதிகளையும் நிறைவு செய்தல், பள்ளி மேலாண்மை குழுவுடன் ஒருங்கிணைந்து பள்ளி மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பாக செயல்படும் பள்ளிகளை கண்டறிந்து ‘புதுமைப்பள்ளி’ என்ற விருது வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


 அதன்படி ஒரு மாவட்டத்திற்கு ஒரு தொடக்க பள்ளி, ஒரு நடுநிலை பள்ளி, ஒரு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி என்று 4 பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும்.


 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு தலா 1 லட்சமும், சான்றிதழ்களும் வழங்கப்படும். உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு தலா 2 லட்சமும் சான்றிதழ்களும் வழங்கப்படும்


. இந்த திட்டத்தினால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும், கற்றல் திறனை மேம்படுத்த உதவும், புதுமையான கற்றல் முறையை பின்பற்ற ஆசிரியர்களிடம் ஊக்கம் ஏற்படும் என்பதாகும். மேலும் பள்ளிகளில் அனைத்து கட்டமைப்பு வசதிகளான சுற்றுச்சூழல் தூய்மை, கட்டிட வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் நிறைவு செய்யப்படும்.


இந்த விருது வழங்கிட மாவட்டத்திற்கு 4 பள்ளிகளை தேர்வு செய்ய மாநில தேர்வு குழுவும், மாநில தேர்வுக்கு பரிந்துரை செய்திட மாவட்ட அளவில் தேர்வு குழுவும் அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.


மாவட்ட தேர்வு குழுவில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட 7 பேரும், பள்ளி கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர் உள்ளிட்ட 5 பேர் மாநில அளவிலான குழுவிலும் இடம்பெற்றுள்ளனர்.


 வகுப்பறைகளில் மாணவர்களின் கற்றலுக்கு உதவும் வகையில் இருக்கை, மின்விசிறி வசதிகள், பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருத்தல், விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள், பசுமைச்சூழல், ஆசிரியர் ஓய்வறை போன்ற அம்சங்கள் ஆராயப்படும். மேலும் பள்ளி செயல்பாடுகளும் ஆராயப்பட்டு விருதுக்கான பள்ளி தேர்வு செய்யப்படும். பள்ளிக்கு விருதுக்கான பரிந்துரைகளை சமூக நல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் போன்றோரும் வழங்கலாம்.


 புதுமைப்பள்ளி விருதுக்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 128 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு 1.92 கோடி பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments