6ம் வகுப்பு மாணவி ரக் ஷணாவுக்கு விருது

கரூர் மாவட்டம், மண்மங்கலத்தைச் சேர்ந்த, 6ம் வகுப்பு மாணவி ரக் ஷணாவுக்கு, சமூக முன்னேற்றம் காணும் பெண் குழந்தைக்கான விருதை, தமிழக அரசு வழங்கி கவுரவித்துள்ளது.கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியம், ராமேஸ்வரபட்டியைச் சேர்ந்த, 6ம் வகுப்பு மாணவி, ரக் ஷணா.மரம் நடுதல், மரங்களுக்கு நுண்நீர் பாசனத்தை பயன்படுத்துதல், கண் தானத்தை ஊக்கப்படுத்துதல், இடை நிற்றலை தடுத்து, மூன்று மாணவியர் பள்ளி செல்ல உதவியது உள்ளிட்ட சமூகப் பணிகளை, தன் பெற்றோரின் உதவியுடன், செய்து உள்ளார்.இதையடுத்து, ரக் ஷணா, இந்த ஆண்டுக்கான, சமூக முன்னேற்றம் காணும் பெண் குழந்தைக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.நேற்று முன்தினம், சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர், இ.பி.எஸ்., ௧ லட்சம் ரூபாய் காசோலை மற்றும் விருதை, ரக் ஷணாவுக்கு வழங்கி, கவுரவித்தார்.சமூக நலத் துறை, சுகாதாரத் துறை, பள்ளி கல்வித் துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன், இந்த விருது வழங்கப்பட்டது.கலெக்டர் உதவியுடன், தன் திருமணத்தைநிறுத்தி, தற்போது படிப்பை தொடரும், பிளஸ் ௧ மாணவி, நந்தினி, ஜன., 24ல், தேசிய பெண் குழந்தை கல்விக்கான விருதை பெற்றார். அவரும், நேற்று முன்தினம், முதல்வர், இ.பி.எஸ்., சிடம் வாழ்த்து பெற்றார்.மேம்பட்ட சமூக பங்கேற்புக்காக தேசிய விருது பெற்ற, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமியும், முதல்வர், இ.பி.எஸ்.,சிடம் வாழ்த்து பெற்றார்.நிகழ்ச்சியில், சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா, தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன், சமூக நலத்துறை கமிஷனர், அமுதவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Share this