632 உடற்கல்வி பணியிடங்களுக்கான தேர்வு... மதுரை ஹைகோர்ட் புது உத்தரவு

தமிழகத்தில் 632 உடற்கல்வி சிறப்பாசிரியர்
பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து மதுரை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு கடந்தாண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர். தேர்வு அறிவிப்பாணையில் கல்வித்தகுதி முறையாக குறிப்பிடப்படவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. அதில், தேர்வுப் பட்டியலை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, தனித் தனி கல்வித் தகுதி அடிப்படையில் தொடக்க பள்ளி மற்றும் மேல் நிலை பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அதனை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக மேல் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது முறையான கல்வித் தகுதியுடன் தேர்வு எழுதியே தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டதாக அரசு மற்றும் மேல் முறையீடுதாரர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்று தேர்வுப் பட்டியல் அறிவிப்பை உறுதி செய்த நீதிபதிகள், நான்கு வாரங்களில் பணி நியமன ஆணைகளை வழங்க உத்தரவிட்டனர்.

Share this