போராடிய ஆசிரியர்களுக்கு இன்று புதிய சம்பள பட்டியல்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' நடத்திய, வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, புதிய சம்பள பட்டியல், இன்று தயாரிக்கப்படுகிறது. குடியரசு தினத்தன்று பணியில் சேர்ந்தவர்களுக்கும், சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.ஜாக்டோ - ஜியோ சார்பில், ஜன., 22 முதல், 30 வரை, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, அவர்கள் வேலைக்கு வராத நாட்களுக்கு, சம்பள பிடித்தம் செய்ய வேண்டும் என, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டார்.ஆனால், பல இடங்களில், கருவூல துறை அதிகாரிகள் மற்றும் துறை தலைவர்கள் சேர்ந்து, 'ஸ்டிரைக்' நடந்த நாட்களுக்கும் சேர்த்து, அனைவருக்கும் சம்பளம் தரும் வகையில், பட்டியலை அங்கீகரித்தனர். இந்த முறைகேட்டை, உயர் அதிகாரிகள் கண்டறிந்து, உடனடியாக கருவூல துறையில் இருந்து, சம்பள பட்டியலை திருப்பி அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட, 'ஆன்லைன்' பண பட்டுவாடாவுக்கான உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது.இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு, இன்று புதிய சம்பள பட்டியல் தயாரித்து அனுப்பப்பட உள்ளது. இதில், விதிமீறல் இன்றி வேலை நாட்களை பதிவிட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, பல்வேறு அறிவுரைகளை, துறை தலைவர்களுக்கு பள்ளி கல்வி மற்றும் அரசு துறை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். அதன் விபரம்:அரசு வேலை நாட்களில், பகல், 12:00 மணிக்குள் பணிக்கு சேர்ந்தால் மட்டுமே, அந்த நாளுக்கான சம்பளத்தை பதிவிட வேண்டும். பிற்பகலில் சேர்ந்தால், அவர்கள் அடுத்த வேலை நாளில் இருந்தே, பணியில் சேர்ந்ததாக கருதப்படும்.குடியரசு தினத்தில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து, தேசிய கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்க வேண்டியது அவர்களின் கடமை. குடியரசு தினம், பள்ளி மற்றும் அலுவலக வேலை நாள் கிடையாது. இந்த ஆண்டு, சனிக்கிழமை குடியரசு தினம் வந்ததால், சனிக்கிழமைக்கு முந்தைய வேலை நாளில், பகல், 12:00 மணிக்குள் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே, குடியரசு தினத்திற்கும் சம்பளம் கிடைக்கும்.குடியரசு தினத்தில் பணிக்கு சேர்ந்ததாக, யாரையும் கணக்கில் சேர்க்கக் கூடாது. அவர்கள், ஜன., 28 முதல், எந்த வேலை நாளில் பணிக்கு வந்தனரோ, அன்று முதல் மட்டுமே, சம்பள கணக்கில் சேர்க்க வேண்டும்.இதில், முறைகேடு செய்தால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள், அந்த பட்டியலை அங்கீகரிக்கும் கருவூல துறை அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.அரசு உதவி பள்ளிகளில் தில்லுமுல்லுஅரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும், சில தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்றது, பள்ளி கல்வி துறைக்கு தெரியவந்துள்ளது. அவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யாமல், பள்ளிகளின் செயலர்கள், தாளாளர்கள், சம்பள பட்டியலை கருவூல துறைக்கு அளிப்பதாக புகார் எழுந்துள்ளது.இந்த வகையில், பள்ளி நிர்வாகத்தினரே விதிமீறலில் ஈடுபடுவதாக, பள்ளி கல்வி துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, போலி வருகை பதிவேடு தயாரிப்பது போன்ற முறைகேட்டில் பள்ளிகள் சிக்கினால், அவர்களுக்கு, அடுத்தடுத்த மாதங்களில் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும். சட்டரீதியாக பள்ளி நிர்வாகத்தினர் மீது, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Share this

1 Response to "போராடிய ஆசிரியர்களுக்கு இன்று புதிய சம்பள பட்டியல் "

  1. பிச்சை பாத்திரம் ஏந்தி வருகிறோம் என்ற தலைமை செயலாளருக்கு போடுங்கப்பா பிச்சை.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...