ஆசிரியர்கள் போராட்டம் சுயநலமா? பொது நலமா?

‘50 ஆயிரம், 60 ஆயிரம் சம்பளம் கொடுப்பதால்தான் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்; எங்களுக்கு வெறும் 10 ஆயிரம் கொடுங்கள், அவர்களை விட நன்றாக பாடம் நடத்தி காட்டுகிறோம்’’ஆசிரியர் பயிற்சி பெற்ற சில இளம் பெண்களும் சில இளைஞர்களும் பேசுவதுபோல வீடியோ காட்சி செய்திகள், கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் பரபரத்தன.தமிழகம் முழுவதும் தற்காலிக ஆசிரியர் வேலைக்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருப்பதாகவும் பரபரப்புச் செய்திகள். வேலைநிறுத்தத்தில் நீடித்து உறுதியாக நின்றால், எங்கே தங்களது வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் எண்ணற்ற ஆசிரியர்களும் அதேபோல் அரசு ஊழியர்களும் வேலைநிறுத்தத்திலிருந்து விலகி பணிக்கு திரும்பி வருவதாக சில செய்திகள்; 90 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டார்கள் என்றும் சில செய்திகள் பரபரத்தன.ஒருவாரத்திற்கும் மேலாக போராட்டக்களத்தில் உறுதியோடு நின்ற லட்சக்கணக்கான ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களின் உறுதிப்பாட்டை குலைக்கும் நோக்கோடு ஊடக கார்ப்பரேட்டுகள் நடத்திய தாக்குதல்கள் இவை. இத்தோடு, சமூக ஊடகங்களில் பொத்தாம் பொதுவாக ஆசிரியர்கள் மீதும் அரசு ஊழியர்கள் மீதும் சேறு வாரி இறைத்த வலைப் புலிகளும் சேர்ந்து கொண்டார்கள்.ஆனால் உண்மையில், தேர்வுகள் நெருங்கிய நிலையில், மீண்டும் மாணவர் நலனை மனதில்கொண்டு, பொது நலனை முன்னிறுத்தி, ஜாக்டோ- ஜியோ தற்காலிகமாக தனது மகத்தான போராட்டத்தை விலக்கிக் கொண்டிருக்கிறது. போராடும் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு எதிராக தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆள் எடுப்போம் என்று அராஜகமான முறையில் இறங்கிய தமிழக அரசின் அறிவிப்புக்கேற்ப- படித்து முடித்து பல்லாண்டு காலமாக வேலை வாய்ப்புக்காக காத்து நிற்கும் தங்களை, போராடிக் கொண்டிருக்கும் ஊழியர்களுக்கெதிராகத்தான் இந்த அரசு நிறுத்துகிறது என்று தெரிந்தும்- மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் தற்காலிக பணிக்கு விண்ணப்பித்த இதே காலத்தில்தான், எங்கே எனது வேலை என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஜனவரி 28,29,30 தேதிகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இங்கே இரண்டு முரண்பாடுகள் இருக்கின்றன.

போராடும் ஊழியர்களுக்கெதிராக நிறுத்தப்பட்டு, தற்காலிக பணி என்றாலும் பரவாயில்லை; அவர்களது வேலையைப் பறித்துவிட்டு எனக்குகொடு என்று மூன்று லட்சம் இளைஞர்கள் விண்ணப்பிக்கிறார்கள். மறுபுறம் போராடும் ஊழியர்களுக்கு முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொண்டு, அவர்களது வேலையையும் உரிமைகளையும் பறிக்காதே; எனக்குரிய வேலையை கொடு என்று வாலிபர் சங்க இளைஞர்கள் வீதியில் களம் காண்கிறார்கள். இரண்டிலும் அடிப்படையான அம்சம் வேலைவாய்ப்பு என்பதே. இங்கே, போராடும் ஆசிரியர் - அரசு ஊழியர்கள்; தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள்; எனக்குரிய வேலையை கொடு என போராடும் இளைஞர்கள்... ஆகிய மூன்று தரப்பினருடனும் மாமேதை மார்க்ஸ் பேசுகிறார்.மேற்கண்ட மூன்று தரப்பும் முதலாளித்துவத்தின் நுகத்தடியில் பூட்டப்பட்டுள்ள - அடிமைகளை போல நடத்தப்படுகிற - உழைப்பு உறிஞ்சப்படுகிற - கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாகியிருக்கிற ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள்தான்.

நிரந்தரமான வேலையில்லா பட்டாளம்

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பில் இத்தகைய கொடூரமான சுரண்டலும், அதன் உச்சகட்ட வடிவங்களில் ஒன்றான வேலையின்மையும் மிகத்தீவிரமாக இருக்கும் என்பதை 200 ஆண்டுகளுக்கு முன்பே மார்க்ஸ் மிகத் தெளிவாக கூறினார். முதலாளித்துவ கட்டமைப்பில், உழைக்கும் வர்க்க மக்களிடையே ஒரு மிகப்பெரிய வேலையில்லா பட்டாளம் நிரந்தரமாக உருவாக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும்; ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களது கூலியை- சம்பளத்தை - அவர்களது உரிமைகளை மேலும் மேலும் வெட்டிச் சுருக்கும் நோக்கத்தோடு, அவர்களுக்கெதிராக மேற்கண்ட வேலையில்லா பட்டாளத்தை நிறுத்தும் என்கிறார் மார்க்ஸ். முற்றாக வேலை வாய்ப்பை உருவாக்காமல் இருப்பது, ஏற்கெனவே உள்ள வேலைகளை படிப்படியாகவும் நிரந்தரமாகவும் வெட்டுவது, புதிதாக சிலரை வேலைக்கு எடுத்தாலும் அவர்களுக்கு முழுமையான ஊதியத்தை கொடுக்காமல் வஞ்சிப்பது, ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களது ஊதியத்தையும் உரிமைகளையும் வேலையில்லாமல் இருக்கும் பட்டாளத்தை உங்களுக்கு எதிராக ஏவுவோம் என்று காட்டி அச்சுறுத்தி பறிப்பது... இவைதான் மார்க்ஸ் கூறிய கருத்துக்களின் விரிவாக்கம். இதை அப்படியே தமிழகத்தில் கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ போராட்டக்களத்தில் கண்முன்னே காண்கிறோம். தமிழகத்தில் அரசுத்துறை வேலைகளில் இருப்பவர்களை விட, வெளியில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிற இளைஞர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை 32.86 லட்சமாக இருந்தது. அப்போது அரசுத்துறைகள் மற்றும் கல்வித்துறையில் பணியிலிருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 12 லட்சமாக இருந்தது. 2017ல் வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை மிகக் கடுமையாக அதிகரித்து 89 லட்சம் பேராக மாறியது; ஆனால், அரசுத்துறைகளில் அதே 12 லட்சம் பேர்தான் வேலையில் இருக்கிறார்கள்; இன்னும் சொல்லப்போனால், ஏராளமான பணியிடங்கள் வெட்டப்பட்டுள்ளன. 2018 இறுதியில் இந்த வேலையில்லா பட்டாளத்தில் மேலும் 15 லட்சம் பேர் புதிதாக இணைந்து ஒரு கோடிக்கும் அதிகமானோர் இன்றைக்கு தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய வேலைவாய்ப்பு நிலவரம் பற்றிய புள்ளிவிபரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

மார்க்ஸ் குறிப்பிட்ட ‘‘இருப்பு வைக்கப்பட்ட வேலையில்லா பட்டாளம்’’ (reserved army of labour) என்பது இதுதான். எழுச்சிமிகு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ ஊழியர்கள், தங்களது பென்சன் உள்ளிட்ட கோரிக்கைகளை மட்டுமல்ல; மேற்கண்ட வேலையில்லா பட்டாளத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு, அரசுத்துறைகளில் காலியாகவுள்ள லட்சக்கணக்கான பணியிடங்களில் வேலை வழங்கு என்ற கோரிக்கையையும் முன்வைத்துத்தான் போராடினார்கள். ஆனால் முதலாளித்துவ கட்டமைப்பின் அடக்குமுறை இயந்திரமான அரசு - தமிழகத்தில் அதிமுக அரசு - காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக, போராடும் ஊழியர்களுக்கெதிராக வேலையில்லா பட்டாளத்தில் இருக்கிற இளைஞர்களை நிறுத்த முடியும் என நினைத்தது. அதனால்தான் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து, தற்காலிக ஆசிரியர்களை எடுக்கும் தைரியம் வருகிறது. ஆனால் இந்த உண்மைகளை மிகச் சரியாக உணர்ந்து, தமிழகத்தில் அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனே நிரப்பு; தனியார் துறை நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளித்திடு; கவுரவமான ஊதியம் மற்றும் உத்தரவாதமான ஓய்வூதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பை உறுதி செய் என்று ஜாக்டோ - ஜியோவின் அதே கோரிக்கைகளை உயர்த்திப்பிடித்து மூன்று நாட்களாக தொடர் மறியல் களத்தில் நின்றது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். போராட்டக் களத்தில் இருக்கிற மார்க்சிய சிந்தனை கொண்ட இடதுசாரி இயக்கங்களுக்கும், வெறுமனே பொத்தாம் பொதுவான நியாயம் பேசி போராட்டங்களை கொச்சைப்படுத்துபவர்களுக்கும் இடையில் உள்ள அடிப்படையான வேறுபாடு இதுதான்.

தகவல் பகிர்வு: திரு லாரன்ஸ்

Share this

1 Response to "ஆசிரியர்கள் போராட்டம் சுயநலமா? பொது நலமா?"

  1. இவர்களின் வருங்காலத்திற்காகத்தான் பெனஷன் கேட்டுப்போராடுகிறார்கள் என்பதை அறியாத தமிழினம் இருக்கும் வரை அரசியல்வாதிகள் இப்படித்தான் ஏமாற்றுவார்கள்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...