கருங்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களிடம் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து வருகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள கிராமம் கருங்குளம். இங்குள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையில் 647 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். 27 இருபால் ஆசிரியர்களைக் கொண்ட இப்பள்ளியில் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் என்பவர் பள்ளியின் தலைமையாசிரியராக இருந்து வருகிறார். இவர் தனது பள்ளியின் குழந்தைகளின் படிப்பை மட்டுமல்லாது, உடல்நலத்தையும் கருத்தில் கொண்டு, தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து வருகிறார்.
பொதுவாக குழந்தைகள் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை தவிர்த்து வருவதனால் பள்ளிக்கு வரும் அனைத்து மாணவ மாணவியர்களையும் தண்ணீர் பாட்டில் எடுத்து வரச்சொல்லி, இயற்கை உபாதைகளுக்காக அளிக்கப்படும் இடைவேளைக்கு முன் "தண்ணீர் பெல்" என்ற பெல் அடித்து, அப்போது அந்தந்த வகுப்பாசிரியர்களைக் கொண்டு மாணவ மாணவியர்களை நீர் அருந்த வைக்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு இடைவேளையின் போதும் நீர் அருந்தும் பழக்கம் மாணவ மாணவியர்களுக்கு கட்டாயப்படுத்தப்படுகிறது. மேலும் தண்ணீரால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனால் பள்ளி நேரத்தில் மட்டும் தினமும் 2 லிட்டர் அளவு தண்ணீர் பருக வைக்கப்படுவதாக கூறும் தலைமையாசிரியர், இதன் மூலம் தனது பள்ளி மாணவ மாணவியர்கள் சிறுநீரக பிரச்னைகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்வை அடையும் நிலை உருவாக்கப்பட்டு வருகிறது என்று கூறுகிறார்.
தமிழகத்தில் முதன்முறையாக கருங்குளம் அரசுப் பள்ளியில் எடுத்துள்ள இந்த முயற்சியை மற்ற பள்ளிகளும் பின்பற்றினால் வருங்காலத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தரமான கல்வி மட்டுமின்றி, ஆரோக்கியமான நோயற்ற வாழ்வை தர முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...