தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இளம் விஞ்ஞானிக்கான ஆய்வுக் கட்டுரைப் போட்டி, கடந்த 2015-16 கல்வி ஆண்டில் நடத்தப்பட்டது.
இதில் மாநில அளவில் வெற்றிப் பெற்ற மாணவர்கள், புனேவில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தேசிய அளவிலான கட்டுரைப் போட்டியில் வெற்றிப் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 100 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக 50 மாணவர்கள் ஐரோப்பா கண்டத்திலுள்ள பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இதில், திண்டுக்கல் மாவட்டம், சிலுவத்தூர் அடுத்துள்ள கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவர்கள் முறையே க.சௌந்தரராஜன் மற்றும் கி.கனகவேல் ஆகியோர் பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளுக்கு சென்று வெள்ளிக்கிழமை திரும்பினர். இதுதொடர்பாக மாணவர்கள் கனகவேல், சௌந்தரராஜன் கூறியது:
பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளில் தாய்மொழி வழியாகவே கல்வி கற்பிக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தி, பாடம் கற்பிக்கின்றனர். பெரும்பாலும் செயல்முறை கல்வியே வழங்கப்படுகிறது. அங்கு 7 வயதிலேயே குழந்தைகள் 1ஆம் வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். கல்லூரி படிப்பு வரை இலவச கல்வியே வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட பாடத்தை மட்டுமே தேர்வு செய்து படிக்க வேண்டும் என்ற நடைமுறை இல்லை. மாசில்லாத சுற்றுப்புறச் சூழல் உள்ளது. படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு உறுதி என்ற நிலை உள்ளது.
இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைப்பதற்கு கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை ஜெ.பிரசன்னா ஜூலியட் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பேருதவியாக இருந்தனர் என்றனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...