தலைமை ஆசிரியரை மாற்றாதீங்க... கல்வி அலுவலரிடம் கெஞ்சிய திருப்பத்தூர் மாணவர்கள்!

திருப்பத்தூர், அருகேயுள்ள சோழம்பட்டி கிராமத்தில் மாறுதல் செய்யப்பட்ட தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் நியமிக்கக்கோரி பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சோழம்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி 1975-ம் ஆண்டு 120 மாணவர்களுடன் தொடங்கப்பட்டு படிப்படியாகக் குறைந்து ஒரே ஒரு மாணவன் பயிலும் பள்ளிக்கூடமாக மாறியது. இந்த நிலையில், ஏற்கெனவே அங்கு பணிபுரிந்த சகாயராஜ் என்ற ஆசிரியர் 2013-ல் அப்பள்ளியில் மீண்டும் ஆசிரியாகப் பொறுப்பேற்று ஒரு மாணவனாக இருந்த பள்ளியை 50 பேர் படிக்கும் நிலைக்கு கிராமப் பெரியவர்களுடன் சேர்ந்து உயர்த்தி தற்போதும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 
இந்த நிலையில், கடந்தவாரம் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக அருகில் உள்ள கீழநிலை என்ற கிராமத்துக்கு மாற்றப்பட்டார். மேலும், திங்கள்கிழமையன்று பள்ளிக்கு வந்த குழந்தைகள் தலைமை ஆசிரியர் மாற்றப்பட்டதை அறிந்து பெற்றோர்களுடன் பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கண்டவராயன்பட்டி போலீஸார் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். பலன் அளிக்காததால் விரைந்து வந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சாந்தி கிராம மக்களிடமும், பள்ளிக்குழந்தைகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அதே தலைமை ஆசிரியரைப் பள்ளிக்கு வரவழைப்பதாக உறுதியளித்து அத்தலைமை ஆசிரியரைப் பள்ளிக்கு வரவழைத்தார். 
அதைத் தொடர்ந்து பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். பேச்சுவார்த்தை நடத்த வந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலரிடம் மாணவர்கள் திரும்பவும் அதே ஆசிரியர் வேண்டும் என்று கெஞ்சியது கிராமத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

Share this

0 Comment to "தலைமை ஆசிரியரை மாற்றாதீங்க... கல்வி அலுவலரிடம் கெஞ்சிய திருப்பத்தூர் மாணவர்கள்!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...