நடுநிலையோடு தேர்தல் பணி: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

ஜாக் டோ-ஜியோ போராட்டத்தை ஆதரித்தவர் யார், எதிர்த்தவர் யார் என்று நன்றாக தெரியும். அதனால் தேர்தலில் நடுநிலையோடு பணியாற்ற உள்ளோம் என்று ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


 ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அன்பரசு, வின்சென்ட் பால்ராஜ், கேபிஓ.சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


 அதில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்ட மன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அவர்களின் குடும்பத்தாரும் தவறாமல் 100 சதவீதம் வாக்களிப்பது, தேர்தல் பணி மற்றும் தபால் ஓட்டுப்பதிவு தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையரை 29ம் தேதி சந்தித்து முறையிடுவது, பொள்ளாச்சி கொடூர சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கும் வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பின்னர், தீர்மானங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட் பால்ராஜ், அன்பரசு, சுரேஷ் ஆகியோர் கூறியதாவது:


 தேர்தலில் நடுநிலையோடு பணியாற்றுவோம். எந்த தேர்தலிலும் 100 சதவீதம் அளவுக்கு வாக்களிக்க முடியவில்லை.


எனவே எங்கள் நாடாளுமன்ற தொகுதிக்குள் தேர்தல் பணி கொடுத்தால் நாங்களும் வாக்களிக்க முடியும்.


அதிமுக தேர்தல் அறிக்கையை படித்தோம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்ற வார்த்தையே அதில் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்

Share this