108 மாணவர்களுக்கு விண்வெளி ஆய்வு பயிற்சி

இஸ்ரோ சார்பில் பள்ளி மாணவர்கள் 108 பேருக்கு விண்வெளி ஆய்வு பயிற்சி இரு வாரங்கள் அளிக்கப்படவுள்ளது. "யுவிகா' எனப்படும் அத்திட்டமானது திங்கள்கிழமை முதல் தொடங்கப்படுகிறது. 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் இருந்து தலா 3 மாணவர்கள் அப் பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோள், ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த செயல்முறை விளக்கங்களை அளிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்த அறிவிப்பை அண்மையில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், "அடுத்த தலைமுறையினருக்கு விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான அறிவை மேம்படுத்தவும், இளம் விஞ்ஞானிகள் பலரை உருவாக்கும் நோக்கிலும் யுவிகா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது' என்றார்.
 அதன் அடிப்படையில் தற்போது பள்ளி மாணவர்கள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தங்கியிருந்து அப்பயிற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 பயிற்சிக்கான பாடங்கள், விவரங்கள் அனைத்தும் டேப்லெட் (கையடக்கக் கணினி) மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அதன் வாயிலாக பயிற்சியளிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 ராக்கெட் ஏவுதளம், கட்டமைப்புக் கூடம் உள்ளிட்ட இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று நேரடி செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளன. இரு வாரங்கள் அப்பயிற்சி நீடிக்கும் என்றும், கே.சிவன் உள்பட இஸ்ரோ விஞ்ஞானிகள் பலருடன் மாணவர்கள் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this

0 Comment to "108 மாணவர்களுக்கு விண்வெளி ஆய்வு பயிற்சி "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...