தமிழகத்தில் '2017-18ம் கல்வியாண்டில் பிளஸ் 1
வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுதேர்வுகளில்
தேர்ச்சி பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்த பின்னரே கல்லூரிகளில் சேர்க்கை
வழங்கப்பட வேண்டும்' என்று உத்தரவிடப்பட்டுள்ளதால் பிளஸ் 1 தேர்வு
முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் ஆயிரக்கணக்கான மாணவர்களின்
எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தபட்ட பிளஸ் 1 பொது
தேர்வில் பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவர்கள் எழுதினர்.
இதில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 75 ஆயிரம் பேர் தோல்வி
அடைந்தனர். பிளஸ் 1ல் தோல்வி அடைந்தவர்கள் தொடர்ந்து பிளஸ் 2 படிக்கலாம்,
ஆனால் தோல்வியுற்ற பாடங்களை ஜூன் மாத சிறப்புத் தேர்வு அல்லது பிளஸ் 2
பொதுத்தேர்வுடன் சேர்த்து எழுதலாம் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில்
அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் 2018ம் ஆண்டு பிளஸ் 1 தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை பிளஸ் 2
தேர்வு எழுத உள்ளவர் எண்ணிக்கையைவிட 29 ஆயிரம் பேர் குறைந்ததும், தனியார்
பள்ளிகளில் படிக்கும் 28 ஆயிரத்து 167 பேருக்கு 100 சதவீத தேர்ச்சிக்காக
அவர்களை பள்ளியை விட்டு பள்ளி நிர்வாகங்கள் நீக்கம் செய்ததும் தெரியவந்தது.
அவ்வாறு மாற்றுச் சான்றிதழ் பெற்றவர்கள் செய்முறை தேர்வுடைய பாடங்களில்
படித்திருந்தால், தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுவதில் பிரச்னை ஏற்படும்
என்று தேர்வுத்துறை தெரிவித்ததுடன் அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க
உத்தரவிட்டது.
தற்போது மீண்டும் அந்த மாணவர்கள் தங்கள் உயர் கல்வியை தொடர புதிய பிரச்னையை
சந்தித்துள்ளனர். பிளஸ் 1, பிளஸ் 2 இரு பாடங்களில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு மட்டுமே கல்லூரிகளில் சேர்க்கை வழங்க வேண்டும் என்று
கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து அரசு கலை
கல்லூரிகள், உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள்,
சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள், இணை இயக்குநர்கள்,
பல்கலை பதிவாளர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் அனுப்பி வைத்துள்ள
சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
2017 -18ம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாமாண்டு சேர்ந்த மாணவர்கள் மார்ச்
2018ல் 600 மதிப்பெண்களுக்கு மேல்நிலை முதலாமாண்டு பொது தேர்வையும், மார்ச்
2019ல் 600 மதிப்பெண்களுக்கு மேல்நிலை இரண்டாமாண்டு பொது தேர்வையும்
எழுதியுள்ளனர். அதன்படி 'மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்
தேர்வுகளை எழுதிய மாணவர்களுள் இரு தேர்வுகளிலும் அனைத்து பாடங்களிலும்
தேர்ச்சி பெற்ற மாணவர்களே உயர் கல்வி சேர்க்கைக்கு தகுதியானவர்கள்' என்று
அரசு தேர்வுகள் இயக்கு
நரக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 2017-18ம் கல்வியாண்டில் மேல்நிலை (பிளஸ் 1) வகுப்பில் சேர்ந்த
மாணவர்கள் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொது தேர்வுகளில்
தேர்ச்சி பெற்றுள்ளனரா? என்பதை உறுதி செய்த பின்னரே மாணவர்களை கல்லூரிகளில்
அரசாணையில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி சேர்க்க
வேண்டும் என்று அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பல்கலைக்கழக உறுப்பு மற்றும்
சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு
அறிவுறுத்தப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 19ம் தேதி
வெளியிடப்பட்டது. எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 29ம் தேதி
வெளியிடப்பட்டது. ஆனால் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8ம் தேதி
வெளியிடப்பட இருப்பதாக தமிழக அரசு முன்கூட்டியே அறிவித்துவிட்டது. பிளஸ் 1,
பிளஸ் 2 இரு தேர்வுகளிலும் வெற்றிபெற்றவர்கள் மட்டுமே உயர் கல்வியை தொடர
முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும்
ஏற்கனவே பிளஸ் 1ல் தோல்வியடைந்த மாணவர்கள் மறு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி
பெற்றார்களா என்பதை இப்போது அறிய முடியாத நிலை உள்ளது. இந்த சூழலில் கலை
அறிவியல் கல்லூரிகளில் தற்போது மாணவர் சேர்க்கை முழு வீச்சில் நடைபெற்று
வருகிறது. பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடியும் தருவாயில் உள்ளது.
ஒரே நிலையில் கருதப்படுகின்ற தேர்வுகள் என்பதால் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை
தொடர்ந்து பிளஸ் 1 தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டிருந்தால் இந்த
குழப்பம் ஏற்பட்டிருக்காது. இப்போது கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இறுதி
கட்டத்தில் உள்ளது. கல்லூரிகளில் அட்மிஷன் முடிந்துவிட்டால் இவர்கள் உயர்
கல்வியை எங்கு தொடருவது என்ற கேள்வி எழுந்துள்ளது. பிளஸ் 2 தேர்வு
முடிவுகள் வெளியாகி 20 நாட்களுக்கு பிறகு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிட
திட்டமிடப்பட்டதால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம்
கேள்விக்குறியாகியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...