Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாழ்க்கைக் கல்வி – கியூபாவிடம் கற்போம் – ஆயிஷா இரா.நடராசன்

சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த
கல்வி கருத்தரங்கம் ஒன்றில் கியூபாவின் ஆசிரியர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கேற்ற கியூபாவைச் சேர்ந்த ஏழெட்டு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் அறிவு பூர்வமாகக் கருத்தரங்குகளில் உரை ஆற்றியது மட்டுமல்லாமல், இனிமையாகப் பாடினார்கள். நளினமாக நடனம் ஆடினார்கள். அற்புதமாகக் கிட்டார் புல்லாங்குழல் வாசித்தார்கள். சிறப்பாக நாடகமாக்கம் குறித்துப் பேசினார்கள். எப்படி இத்தனை திறன்களை வளர்த்துக் கொண்டார்கள் என ஆச்சிரியப்பட்டபோது. கியூபா கல்வி முறைப்படி அங்குள்ள அனைவருக்கும் இத்திறன்க‌ள் பயிற்றுவிக்கப்படுவதாகச் சொன்னார்கள்.
அதைக் கேட்டதும், வெற்று கட்டளைகளையும் அரசாணைகளையும் நம்பி இருக்கும் நமது ஆரம்பக் கல்வி ஆசிரியர் பயிற்சி எவ்வளவு மேம்பட வேண்டி இருக்கிறது என மனம் நொந்தது. பாடத்திட்டத்தைத் தேர்வு செய்வதிலிருந்து வகுப்பறை பயிற்று முறை வரை ஆசிரியர்களையும் மாணவர்களையும் குழுவாக அமைத்து அனைத்திலும் அவர்களது பங்கேற்பை உறுதி செய்கிறது கியூபா.
யுனெஸ்கோவின் உலகக் கல்வி தர வரிசைப் பட்டியலில் இப்போதெல்லாம் முதல் இரண்டு மூன்று இடங்களில் ஏதேனும் ஒன்றைப் பிடித்துவிடுகிறது கியூபா. ஆனால் 1959ல் ஃபிடல் காஸ்ட்ரோவின் சோஷலிச அரசு பதவி ஏற்றபோது கியூபாவின் எழுத்தறிவு 52% மட்டுமே அந்த நிலையிலிருந்து முன்னேறி இன்று 99.7% எழுத்தறிவு பெற்ற  நாடாகக் கியூபா மிளிர்கிறது. அமெரிக்கா உட்பட 62 வளர்ந்த நாடுகளின் குழந்தைகளின் அறவுத் திறன் சராசரி 70 புள்ளிகளாக இருக்கும் போதே கியூபா குழந்தைகளின் அறிவுத் திறன் சராசரி 100 புள்ளிகளை எட்டியது. கல்வி அரசின்  பொறுப்பு:
கியூபாவில் கல்வி என்பது பெற்றோர்களின் கவலை அல்ல பிறந்த குழந்தையின் சுகாதாரமும் கல்வியும் அரசின் பொறுப்பு. குழந்தைகள் பள்ளி செல்லும் வயது ஆறு. தாய்மொழியான ஸ்பானிஷில் மட்டுமே கல்வி. தொடக்கப்பள்ளிப் படிப்பு ஆறு ஆண்டுகள். புத்தகம், நோட்டு, வீட்டுப்பாடம், தேர்வுக்கு இடையிலான போராட்டம் அல்ல. அது இசை, தோட்டம் போடுதல், சுகாதாரக் கல்வி, நடனம், நாட்டுப்பற்று இவையே தொடக்கக் கல்வியின் அடிப்படைப் பாடத்திட்டம். மருத்துவக் குழுக்கள் இல்லாத கல்வி நிறுவனங்கள் இல்லை. பள்ளிக்கூடம் போகாத குழந்தை என்று யாரும் கிடையாது.
மூன்று அடுக்கு கல்வி:
கல்வித் தரத்தில் முன்னுதாரணமாகக் கியூபா இன்று ஒளிரக் காரணம் மூன்று படிநிலைகள். 1961ல் அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் எழுத்தறிவு இயக்கம் அதன் முதல்  படி புரட்சி என்பது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது அல்ல. அனைத்து மக்களுக்குமான சமமான வாய்ப்போடு கல்வி சுகாதாரம் வாழ்க்கைத் தரம் ஏற்படுத்தும் வரை தொடரும் எனும் சேகுவராவின் ஒற்றை முழக்கத்தின் வழியே கட்டமைக்கப்பட்ட இயக்கம் அது.
22% மக்களுக்கு மட்டுமே தரமான கல்வி வாய்த்திருந்த அக்காலக்கட்டத்தில் 1 லட்சத்து 28 ஆயிரம் கல்விப் புரட்சியாளர்கள் (Educational Revolutionaries) மூலமாக 817 எழுத்தறிவு மையங்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்குக் கல்வி புகட்டியது அந்த இயக்கம். வாய்ப்பு வசதிகளில் கிராம, நகரப் பெண்களுக்கு இடையே நிலவும் இடைவெளி கியூபா பெண்கள் கூட்டமைப்பு (Federation of Cuban Women) மூலமாகக் களையப்பட்டது இரண்டாம் படிநிலை.
சமூக மாற்றங்களுக்கான கல்வி (Education for Social Change) என்ற கொள்கையோடு காஸ்ட்ரோவின் 1981 இயக்கத்தின் வழியே சமூகநிதியும், சமத்துவமும் நவீனத்துவமும் சாதித்தது மூன்றாம் நிலை ஆகும். இன்று தொடக்கக் கல்வியில் நுழையும் 100 கியூபா குழந்தைகளில் உயர்நிலைப் பள்ளி இறுதிப் படிப்பை முடிப்பவர்கள் 99 பேர்.  இந்தியாவைஎடுத்துக்கொண்டால் ஆண் குழந்தைகள் 27 என்பதே இன்றைய நிலை. மருத்துவருக்கும் விவசாயப் பயிற்சி
பள்ளி இறுதிவரை மட்டுமல்ல கல்லூரி வரை கூட கியூபா மாணவர்களுக்குப் படிக்கக் கட்டணமும் கிடையாது. 100% மானியத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் அரசே கல்வி அளிக்கிறது. பல்கலைக்கழக கல்லூரிப் படிப்பு என்பதும் வெறும் பாடம். தேர்வு என்பதோடு முடிந்துவிடுவது அல்ல. மூன்று விதமாக அது கட்டமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகப் பட்டத்துக்கான (The Licenciatura) படிப்புகள் முதல் வகை. தொழில் நுட்பம் மற்றும் பயிற்சி கல்வி (Titulo) இரண்டாம் வகை. இந்த இரண்டுமே நான்கு அல்லது ஐந்தாண்டுகளைக் கொண்டவை. மூன்றாவது தனித்துவம் வாய்ந்தது. 200 மணி நேரம் வகுப்பு பாடங்களும் (Theory) பெரும்பாலான மணி நேரம் நேரடி உற்பத்தி (Practicum and Especialists) முறையில்பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இது பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு இப்படி எதைக் தேர்ந்தெடுத்துப் படித்தாலும் விவசாய உற்பத்தியில் நேரடிப் பயிற்சிபெறும் பட்டயம்(Diplomands) ஒரு ஆண்டு பயிற்சி கட்டாயம். சர்க்கரை உற்பத்தி, நிக்கல் உட்பட ஏழு உலோகத்தாதுக்கள், மீன் பிடிப்பு, சோளம், கேழ்வரகு உற்பத்தி ஆகியவற்றில் கியூபா முதலிடத்தில் இருப்பதன் ரகசியம் இந்தக் கல்வி முறையே.
மனப்பாடம் என்ற பேச்சுக்கே இடமில்லை:
கலந்துரையாடுதல் (Discustura) விவாதித்தல் (Dialogueo) முறைகளுக்கே கியூபாவின் வகுப்பறைகளில் முன்னுரிமை தரப்படுகிறது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு என்பது குழுத்தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையிலான உறவுக்கு ஒப்பானது. அதிலும் முக்கியமாக மனப்பாடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாட்டில் 27 பேரில் ஒருவர் ஆசிரியர். வேலை நேரம் போக உள்ளூர் தேவைகளுக்குப் பள்ளிக்கூடம் பயன்படுத்தப்படுகிறது. விவசாய உற்பத்தி பொருட்களைத் தற்காலிகமாக வைத்தல், மாலைநேர இயக்கம், அரசு சார்ந்த அமைப்புக் கூட்டங்கள் நடத்துதல், திருமணங்கள் உட்படப் பாவற்றுக்குப் பள்ளி வளாகம் சமூகத்தின் ஒரு அங்கமாகச் செயல்படுகிறது.
கற்றுக்கொள்ள ஏராளம்:
பள்ளி இறுதி ஆண்டில் ஒரு மாணவர் மின்சார நிலையம், மருத்துவமனை நலப்பணி, உள்ளூர் விவசாய உற்பத்திப்பணி, துப்புரவுப்பணி, தொழிலகப்பணி எனப் பல நேரடி உழைப்புச் சான்றுகள் பெற்று நாட்டின் உழைப்பில் ஒரு அங்கமாய்த் தன்னை உணரும் கல்வியை நினைத்துப் பாருங்கள். டியூசன் கலாச்சாரத்தில் சிதைந்து மதிப்பெண்ணைத் துரத்தும் நமது குழந்தைகளை எண்ணி வேதனைப்படுவீர்கள்.
நாட்டில் வருடாந்தர பட்ஜெட்டில் கல்விக்குழு கியூபா ஒதுக்குவது 13%. இந்தியா சென்ற வருடம் ஒதுக்கியதோ 3% அங்கே 12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் எனும் வகுப்பறை விகிதாசாரம் உட்பட பல அற்புதங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். தனியார் சந்தையின் வியாபாரமாகக் கல்வி மாறிப்போன பிறகு, குழந்தைகளுக்கான கல்வி உரிமைச் சட்டம் என்பது நம் நாட்டில் என்ன சாதித்து விடப்போகிறது? புதிய கல்விக் கொள்கை பற்றித் தீவிர விவாதங்கள் நடக்கும் நமது சூழலில் கியூபாவிடம் கற்க நமக்கு ஏராளம் உள்ளது.
 நன்றி
 பஞ்சுமிட்டாய்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive