NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எந்தப் பள்ளி முதலிடம்? - சக.முத்துக்கண்ணன்.



பத்தாம்வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எவ்வித பரபரப்பும் விளம்பரக் கூச்சலுமின்றி சமீபத்தில்  வெளியாகியிருந்தன.
எழுத்துத் தேர்வுகள் தரும் வெற்றியும்,  தோல்வியும் தற்காலிகமானதே.
அடுத்தடுத்த ஆண்டுகளில் அம்மாணவர்களின் சூழலுக்கும்  உழைப்புக்கும் ஏற்ப நிலை மாறலாம். தேர்வு முடிவுகளை வாழ்வு முழுமைக்குமான அடைவாகப் பார்க்கும் கூறு தற்போது மாறியிருக்கிறது.  எவ்வித அச்சுறுத்தல்களுமின்றி, சுயபரிசோதனையாக மட்டுமே தேர்வைக் கடந்து போகிற புதிய கலாச்சாரத்தின் தொடக்கமாக இந்த தேர்வு முடிவுகள் வெளியீட்டு முறைமைகளைப் பார்க்கமுடிகிறது.

மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களை வைத்து தம்பட்டம் அடித்த கல்வி நிறுவனங்கள்,  தற்போது '100% தேர்ச்சி' என்பதோடு தன் சாதனைகளை நிறுத்திக்கொண்டன.  சமமற்ற போட்டி என்பதாலேயே தரப்பட்டியல் வெளியிடுவதைப்  பொதுநல நோக்கோடு தமிழக பள்ளிக்கல்வித்துறை தடைசெய்திருந்தது. பல கல்வியாளர்கள் இந்த மாற்றை மனமுவந்து பாராட்டினர். மாணவத் தற்கொலைகள் குறைய, தனியார் பள்ளி விளம்பரக்கூச்சலில் இருந்து ஓரளவு விடுபட இதுவொன்றே காரணமென சமூகஆர்வலர்கள் கொண்டாடினார்கள். அப்போது பள்ளிக்கல்வித்துறைச் செயலராக இருந்த மானமிகு. உதயச்சந்திரன் அவர்கள்  ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் போதும் நினைவு கூரப்படுகிறார்.

சதவீத தரவரிசை:

தற்போது அரசுப்பள்ளிகள் ,அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என தேர்ச்சி விகிதங்களை அரசே வெளியிட்டிருக்கிறது. வழக்கம் போல அரசுப்பள்ளிகள் அதில் மூன்றாமிடத்தில் இருக்கின்றன.  அடுத்தடுத்த வருடங்களிலும் இதே இடம்தான் நீடிக்கும். இந்த நிதர்சனத்தை முதலில் ஏற்கணும். தனியார் பள்ளிகளோடு ஒப்பிட்டு இணையதளத்தில் அரசுப்பள்ளிகளையும், ஆசிரியர்களையும் குறைத்து மதிப்பிடுவது, சாடுவது போன்ற மடைமைகள் நடந்தேறுகின்றன. எவ்வித அடிப்படைப் புரிதல்களும்,  கல்வி குறித்த வரலாறும் அறியாதவர்களின் டீக்கடைப் பேச்சுத்தான் அது. டீ சாப்பிட்டு முடிந்ததும் அந்த பேச்சும் முடிந்து போகும். தீர்வு குறித்த எந்த நினைப்பும் இல்லாத பொழுபோக்குக்கான வாதம் அது.

எந்தவொரு அரசுப்பள்ளிக்குள்ளும் நுழைந்து அதன் நன்மை தீமைகளில் தலையிடாமல்,  அதன் வளர்ச்சி குறித்தோ இயங்கும் தன்மைகுறித்தோ,  உள்ளார்ந்த பிரச்சனைகள் குறித்தோ எந்த பிரஞையுமின்றி பொத்தாம்பொதுவாக பேசும் சராசரிகளின் வீண்பேச்சு அது. தனக்குப் பிடிக்காத ஏதேனும் சில வாத்தியார்களை மனதில் வைத்துக் கொண்டு  மட்டம் தட்டுகிற வேலை. சமீபமாகவே  ஆசிரியர்கள் மீதான காழ்ப்பு பெருகி வருகிறது. அதை முற்றிலும் சரி என்றோ தவறென்றோ வரையறுக்க முடியாது. அரசின் நேர்மையான நடவடிக்கைகளும், திட்டங்களும்,  அரசுப்பள்ளிகளில் மக்கள் தலையீடும் தான் சரிசெய்ய முடியும். வெறும் புலம்பல்களும் வசைகளும்  மாற்றத்தைக் கொணராது. தேவை செயல்பாடுகளே!.  கல்வி வியாபாரப் பொருளாவதிலிருந்து முரண்பட்டு அரசுப் பள்ளிகளின்  குறைபாடுகளைக் களைய அக்கறைகொண்டு வாதிப்பவர்களிடம் உக்கார்ந்து பேசலாம்; உரையாடலாம். அப்படியான செயல்பாட்டாளர்களெல்லாம் கல்வித்திட்டங்களோடு, முறைமைகளோடு முரண்பட்டுக்கொண்டே  அரசுப்பள்ளிகளை ஆதரிக்கிறார்கள். அரசுப்பள்ளிகள் அழிவதன் எதிர்கால  விபரீதம் உணராதவர்கள் தான்  அவ்வப்போது ஊளையிட்டுவிட்டு  பையனுக்கு  பீஸ்கட்டுவதற்காகவே வேலைக்குப் போய்விடுகிறார்கள். "உங்க பிள்ளைகளையெல்லாம் கவர்மண்ட் ஸ்கூல்ல சேத்தீங்களா" என்ற கேள்வியோடு தேங்கி விடுகிறார்கள்.

கல்வியில் நாம் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறோம் என்பதை இந்திய வடமாநிலங்களோடு ஒப்பிட்டு அறிந்து கொள்ளலாம்.. இதையும் தாண்ட வேண்டியதன் தேவை குறித்தும், தற்கால கல்விக்கூட முரண்கள் குறித்தும் நிறைய பேச, செயல்பட வேண்டியிருக்கிறது. அதேநேரத்தில்  நிகழ்கால ஆசிரியர்களின் பணிக்காலாச்சாரம் மீதும் எனக்கும் மாற்றுக் கருத்துண்டுதான். ஆனால் அது மட்டுமே விரிசல் அல்ல. அதைத்தாண்டிய பல வெடிப்புகளையும், அஸ்திவாரக் கீறல்களையும்  கவனிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு தொடர்ச்சியான தலையீடும் செயல்பாடுகளும் அவசியம். அந்த நம்பிக்கையைத் தரும் ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில் அரசுப்பள்ளிகளில் தான் இருக்கிறார்கள்.

எது முதலிடம் :

ஒரு பள்ளி தனக்கு அருகாமையில் வசிக்கும் குழந்தைகளுக்கு வாய்ப்பு மறுக்காமல் கல்வி தருவதே சமூக அறம்.
அதை ஆண்டாண்டு காலமாக அரசுப்பள்ளிகளே செய்து வந்திருக்கின்றன.

கீழ்கண்டவாறு கூறுகளை மனதில் இறுத்தி பள்ளிக்கூடங்களை வரிசைப்படுத்திப் பாருங்கள்.

'எந்தவொரு மாணவனின் பள்ளிச் சேர்க்கையை எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கக் கூடாது' என்கிற இந்தியக் கல்வி உரிமைச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பள்ளிக்கூடங்களை வரிசைப்படுத்தினால்,  தரப்பட்டியலில் அரசுப்பள்ளிகளே முதலிடம் பிடிக்கும்.

தன்னால் தேர்ச்சிபெற வைக்க இயலாத மாணவரை ஒன்பதாம்வகுப்பு வரை அவன் நிலையை அறிந்து ஏற்றுக்கொண்ட  பள்ளி, பத்தாம்வகுப்பில் பெற்றோரை அழைத்து ரிசல்ட் நிலைமையை எடுத்துக்கூறி, அதுவே அறம் என்பது போல அவர்களையே நம்பவைத்து அருகேயுள்ள டுட்டோரியலின் வழி தனித்தேர்வர்களாக எழுத வைக்காத பள்ளிகளை வரிசைப்படுத்தினால் அந்த தரப்பட்டியலில்  அரசுப்பள்ளிகளே  முதலிடம் பிடிக்கும்.

குற்றப்பிண்ணனியோடும், குடும்ப, சமூக சிக்கல்களாலும் தேர்ச்சிபெற வாய்ப்பே இல்லாத மாணவனைப் பத்தாம் வகுப்பில் வெளியேற்றாத பள்ளிகளை வரிசைப்படுத்தினால் அந்த தரப்பட்டியலிலும் அரசுப்பள்ளிகளே  முதலிடம் பிடிக்கும்.

பத்தாம்வகுப்புத் தேர்வில் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை அதிகம்  அனுமதித்த பள்ளிகளை வரிசைப்படுத்திப் பாருங்கள் அரசுப்பள்ளிகளே முதலிடம் பிடிக்கும்.

குடும்பச்சூழல் காரணமாக, உடல்நலமின்மை காரணமாக அதிக நாட்கள் விடுப்பெடுத்திருந்தவர்களை தேர்வெழுத அனுமதித்த பள்ளிகளை வரிசைப்படுத்துங்கள் அரசுப்பள்ளிகளே  முதலிடம்.

பத்தாம் வகுப்பு தேர்வர்கள் பட்டியல் தயாரிக்கும் நேரத்தில், (கிட்டத்தட்ட பாதி கல்வியாண்டு முடிந்த பிறகு) தனியார் பள்ளியால் வெளியேற்றப்பட்ட கற்றல்குறைபாடுள்ள 27 மாணவர்களை
தேனி அல்லிநகரம் அரசுப்பள்ளி
சேர்த்துக்கொண்டது. அதில் 15  மாணவர்கள்  பாஸ். இதைக்கூட  சாதனையாக சொல்லவில்லை. தேர்ச்சிபெறாத 12 பேரில் 7 பேர் எல்லா பாடங்களிலும் பெயில். இந்த ஏழு பேர் தேர்வெழுதுகிற தளமாக இன்று அரசுப்பள்ளிகள்தான் இருந்து கொண்டிருக்கின்றன. எல்லா மாணவர்களையும் போல தானும் எழுத வேண்டுமென்கிற அவனது நியாயமான ஆசைகளை அரசுப் பள்ளிகள் தான்  நிறைவேற்றுகின்றன.

யார் ஒதுக்கினாலும் கடைசியில் தாய்மடி அரசுப் பள்ளிதான்.

இப்படியாக எந்த ஒரு மாணவனையும் ஒதுக்காமல் பரீட்சை எனும் அனுபவத்தை படிக்க வந்த அனைத்து மாணவர்களுக்கும்  வழங்கிய அரசுப்பள்ளிகளே சமூகநீதியின் சரியான வடிவம். அப்படியான அரசுப்பள்ளிகளைக் கொண்டாடுவோம். குறைபாடுகளைச் சரி செய்ய தொடர்ந்து உரையாடுவோம்.

-சக.முத்துக்கண்ணன்.
அரசுப்பள்ளி ஆசிரியர்.
விக்கிரமங்கலம்.
அரியலூர் மாவட்டம்.

kannatnsf@gmail.com




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive