Hi Whatsapp Admins!

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Helo App -ல் உடனுக்குடன் Notifications பெற Click Here & Join Now! - https://m.helo-app.com/al/URyRSdZpFபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வேண்டாம்னு சொல்லலை, ஆனால் இப்போதைக்கு வேண்டாம்ன்னு தான் சொல்றோம்.


          தொட்டுவிடும் தூரத்தில் தொடுவானம், வென்றுவிடும் அளவில் பிரபஞ்சம் என இறுமாந்திருந்த வேளையில், என் உள்ளங்கையில் உலகம் என கர்வப்பட்டுக்கொண்டிருந்த இவ்வுலகம், கொரோனா வைரஸ் பயத்தால், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, செய்வதறியாமல் தவித்துக்கொண்டும், திணறிக்கொண்டும் இருக்கிறது. உலக அளவில் பிரபலமான பல நாட்டுத் தலைவர்கள் தன் இயலாமையை கண்ணீர்விட்டுக் கதறிக் கொண்டிருக்கின்றனர். எதைத்தின்றால் பித்தம் தெளியும்? என்ற மனவோட்டத்தில் எதையாவது செய்ய வேண்டுமே என்ற கட்டாயத்தில் செய்வதறியாது செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர். மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும், காவல்துறைப் பணியாளர்களும், நிதித்துறைப் பணியாளர்களும், உள்ளாட்சித்துறைப் பணியாளர்களும், கல்வித்துறைப் பணியாளர்களும், தன்னார்வலர்களும் தன்னைப்பற்றிக் கவலைப்படாமல் கொரானத் தொற்றுப் பரவலைத் தடுக்க அல்லும் பகலும் இடையறாது பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
          இந்நேரத்தில் தேர்வை நடத்துவது கொரானாத் தொற்றை அதிகப்படுத்துவது போல அமைந்துவிடக்கூடாது. உலக அளவில், அயல்நாடு மற்றும் அயல் இடங்களுக்குச்சென்று வந்தவர்கள் மூலம் மெதுவாக பரவ ஆரம்பித்த கொரானாத்தொற்று இந்தியாவிலும் கால் ஊன்றியது. ஏற்கெனவே, கோயம்பேடு சம்பவம் கொரானாத் தொற்று அதிக அளவில் ஏற்பட முக்கியக் காரணியாக அமைந்துவிட்டது. மதுப்பிரியர்களின் தேவை நிறைவேற்றம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறதோ என்ற அச்சத்தில் சமூகம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனுடன் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வும் தன் பங்களிப்பைச் செய்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்திலே எழுதப்பட்டதே இக்கட்டுரை.
          தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 01.06.2020 ஆல் நாளிலிருந்து தொடங்கி நடைபெறும். ஒவ்வொரு தேர்வறையிலும் 10 மாணவர்கள் அமர வைக்கப்பட்டு தேர்வு நடைபெறும். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே தேர்வு எழுதலாம். மாணவர்கள் தேர்வு எழுத அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர் உறுதி செய்துகொள்ள வேண்டும். ஆசிரியர்கள் தேர்வுப் பணிக்கு தயாராக இருக்க வேண்டும்.தேர்வு நடைமுறைகளை கல்வித்துறை அலுவலர்கள் ஒருங்கிணைத்து செவ்வனே தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். மாணவர்களை தேர்வு மையத்திற்கு வரவழைக்க வேண்டியப் பணியை, தலைமையாசிரியர் மூலமாக செய்யப்பட உள்ளதை, சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். இவை செவ்வனே நடைபெறுவதை முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் திட்டமிட்டு நன்முறையில் செய்து முடிக்க வேண்டும். தொடர்ச்சியான பல அறிவிப்புகள், உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்கள். மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து, செய்வதறியாமல் திகைத்து, விக்கித்து நின்ற வேளையில், பத்தாம் வகுப்பிற்கு அரசுப் பொதுத்தேர்வு நடத்த தடையில்லை என்ற நீதிமன்றத் தீர்ப்பு.
          பல மாணவர்கள் அவரவர் படித்த பள்ளிக்கு அருகாமையிலேயே வசிப்பவர்கள். கொரோனா ஊரடங்கின் காரணமாக சிலர் வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலானோர், நகர்ப்புற மாணவர்களில் சிலர் இந்த ஊரடங்கு காலத்தில் புத்தகத்தை எடுத்து பார்த்தே இருக்கமாட்டார்கள். அப்புறம் எங்கே படிப்பது? அன்றாடம் ஆசிரியர்கள் உருட்டல், வழிகாட்டுதல் இருக்கும்போதே படிப்பதில் சுணக்கம் காட்டியவர்கள் அவர்கள். நீண்டகால நினைவாற்றல் பழக்கத்திலிருந்து, முப்பருவக் கல்வி முறையால், கிட்டத்தட்ட குறைந்தகால நினைவாற்றலுக்கு (Short Term Memory) பழக்கப்பட்டவர்கள். அவர்கள் இப்பொழுது முதல் முறையாக முழுப் பாடங்களுக்கும் அரசுப் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். அரசு கல்வித்துறை சிறப்பான வகையில், தொலைகாட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் பாடங்களை நடத்துதல், மீள்பயிற்சி அளித்தல், . . . போன்றவற்றை செய்திருந்தாலும் மேற்குறிப்பிட்ட மாணவர்களுக்கு அவை எட்டாக் கனியே. அவற்றிற்கு சமூகப் பொருளாதார காரணங்கள் பலப்பல.
          வாழ்நாளில் தங்கள் தகுதியை நிரூபிக்க வேண்டிய, ஒரு படியை வெற்றிகரமாக கடக்க வேண்டிய மாணவ, மாணவியர், எல்லா வகையிலும், அரசின் கல்வித்துறை, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலோடு, தேர்வுக்குத் தயாராகி தன்னை நிரூபிக்கத் தயாராக இருந்த வேளையில், கொரானாத் தொற்று அவர்களைப் புரட்டிப் போட்டுவிட்டது. கொரானாத் தொற்று என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படும்? கொரானாத் தொற்று ஏற்பட்டால் என நிகழும்? அதிலிருந்து தன்னை காத்துக்கொள்வது எப்படி? என்ற பல வினாக்களுக்கு விடை அறிந்துகொள்ளாமலேயே, புரிந்துகொள்ளாமலேயே, பயத்திலேயே இரு மாதங்களுக்கு மேல் முடங்கிக்கிடந்த மாணவர்களும், பெற்றோர்களும் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு அவர்களை கொரானாவை விட அதிகமாக பாதித்து விடக்கூடாது. கிட்டத்தட்ட இரு மாதங்களுக்கு மேல் (ஆசிரியர்-மாணவர்) தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்த மாணவர்கள் ஏராளம்! இப்பொழுது ஆசிரியர்களைப் பார்த்தால், “உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே!” என மாணவர் கேட்கும் நிலை. “புத்தகமா? அப்படி என்றால் என்ன?” என வினவும் மாணவர்களும் உள்ளனர்.
          ஒரு வருடம் முழுவதும் படித்துக்கொண்டே இருக்கும் மாணவர்களுக்கே தேர்வென்றதும் ஒருவித பயம் மனதைக் கவ்வும். அதுவும் இவர்கள் முதல்முறையாக அரசுப் பொதுத்தேர்வைச் சந்திப்பவர்கள். எல்லா வகையிலும் தங்களை ஊக்கப்படுத்திக்கொண்டு, தயாராக இருந்தவர்கள், கொரானாத் தொற்றைத் தவிர்க்க வீட்டிலேயே கிட்டத்தட்ட இரு மாதங்கள் அடங்கிக் கிடந்ததால் தன் சுயத்தினை, தயாரிப்பினை, ஊக்கத்தினை இழந்திருப்பர். அவர்கள் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ளவும், பயத்தை போக்கிக் கொள்ளவும், தன்னை ஊக்கப்படுத்திக்கொள்ளவும், சிறிது அவகாசமும், வழிகாட்டுதலும் கண்டிப்பாக அவசியம். தன் வாழ்க்கை பயணத்தில் முக்கியமான காலகட்டத்தை வெற்றிகரமாக கடக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி, வழிகாட்டுங்கள்.
          தேர்வு அவசியம் தான். கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். ஆனால், இப்பொழுது வேண்டாம். மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து குறைந்தபட்சம் பத்து நாட்களாவது திருப்புதல் செய்து, அவர்களுக்கு வழிகாட்டி, கொரானா குறித்த அச்சத்தைப் போக்கி, (அவர்கள் மூலம் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி,) அவர்களைத் தேர்வுக்கு மனதளவில் தயார் செய்ய வேண்டியது அவசியம். அதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் தயாராக உள்ளனர். இதுவே உகந்ததும் கூட. எனவே தேர்வை ஜூன் 1 ஆம் தேதிக்கு பதில் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடத்த ஆவன செய்யுங்கள்.
          ஜூலை 1முதல் 10 ஆம் தேதி வரை தேர்வு.
          ஜூலை 13 முதல் 18 வரை விடைதாள் திருத்தம்.
          ஜூலை 13 முதல் 25 வரை மேல்நிலை முதலாமாண்டு, பாலிடெக்னிக், தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பித்தல்
          ஜூலை 27 முதல் 31 வரை சேர்க்கை
          ஆகஸ்டு 1 அல்லது 3 முதல் கல்வியாண்டு துவக்கம்.
          1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சில வகுப்புகளுக்கு ஒரு நாளும், சில வகுப்புகளுக்கு மறுநாளும் என ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற வகையிலோ அல்லது காலை சில வகுப்புகளுக்கும், மதியம் சில வகுப்புகளுக்கும் என்ற வகையிலோ அல்லது 1, 2, 3, 6, 7, 8, 11 ஆம் வகுப்புகளுக்கு திங்கள், செவ்வாய், புதன்; 4, 5, 9, 10, 12 ஆம் வகுப்புகளுக்கு வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் என்ற வகையிலோ அல்லது கல்வியாளர்கள் குறிப்பிடும் பிற வகையிலோ கற்றல் கற்பித்தல் பணியினை மேற்கொள்ளலாம். ஆகஸ்டு மாதத்தில் 1 ஆம் தேதியிலிருந்து மேல்நிலை முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கலாம். இந்த ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் மேல்நிலை முதலாம் ஆண்டு பாடப்பகுதியில் சிறிது பாடங்களை நீக்கி கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளலாம்.
          பேருந்து மற்றும் தொடர்வண்டி இல்லாத இந்நேரத்தில், தேர்வெழுத மாணவர்கள் பள்ளிக்கு வருவதும், தேர்வுப்பணிக்கு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வருவதும் பெரும்பாலான இடங்களில் கடினமான ஒன்று. இவற்றை போர்க்கால அடிப்படையில் நன்கு திட்டமிட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும் சிறிது கால அவகாசம் தேவை. மேலும் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வு என்பது மாற்றப்பட்டு, அனைத்து பள்ளிகளும் தேர்வு மையமாக மாற்றியமைக்கப்படுவது மாணவர்களுக்கு உதவக்கூடியதாக இருந்தாலும் தேர்வை நடத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் பல இருக்கின்றன. அவற்றைக் களைய சில திட்டமிடுதல்கள் அவசியம்.
          தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், தேர்வுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கும் கொரானாத் தொற்று ஏற்படாத வகையில், எல்லாவகையான தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வளவு முன்னெச்சரிக்கையையும் மீறி, தேர்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் அல்லது நீக்கமுடியாத வகையில் பாதிப்புகளும் ஏற்பட்டால் அவர்கள் குடும்பங்களுக்கு உரிய வகையில் இழப்பீடுகள் முதலிலேயே அறிவிக்கப்பட வேண்டும்.
          என்றும் மாணவர்கள் நலன், முன்னேற்றம், வழிகாட்டுதல், அவர்களை சமூகத்தில் உயர்த்துதல், . . . போன்ற சமூக நலன் சார்ந்தே நினைக்கும், உழைக்கும், பாடுபடும், சிந்திக்கும், செயல்படும் பணியில் முழுமையான ஈடுபாட்டுடன் உழைக்கும், அர்ப்பணிப்பு உள்ளம் கொண்ட ஆசிரியர்கள் கோரிக்கையினை அரசு பரிசீலிக்க வேண்டும். மாணவர்கள் உயர்வே எங்கள் குறிக்கோள். மாணவர்கள் மற்றும் சமூக நலன் கருதி அரசிடம் இருகரம் கூப்பி இறைஞ்சுகிறோம்! தன் குஞ்சுகளை ஆபத்திலிருந்து காக்க அயராது பாடுபடும் கோழியைப்போல், தாயுள்ளத்தோடு எங்கள் கோரிக்கைக்குச் செவிசாய்த்து உதவிட வேண்டுகிறோம்!

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments