ஜார்கண்ட் மாநிலத்தில் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த ஜகர்நாத் மாதோ, அம்மாநில மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார். 53 வயதாகும் இவர், 10ம் வகுப்பு வரையே படித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தனது படிப்பை தொடர முடிவு செய்துள்ளார். ஆம், தற்போது 11ம் வகுப்பில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து ஒரு சிலர் தனது கல்வித் தகுதி குறித்து ஆக்ரோஷத்துடன் கேள்வி எழுப்பியதாக கூறிய ஜகர்நாத், இதுபோன்ற தொடர் விமர்சனங்கள் தன்னை கல்வி பயில ஊக்கமளித்ததாகவும் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கல்வித்துறையுடன் எனது கல்வியையும் சேர்த்து கவனிக்கப்போகிறேன். 11ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளேன். எனது விண்ணப்பம், விதிகளின் கீழ் வந்தால், கல்வியை தொடர அனுமதி கிடைக்கும். அதன்பிறகு அரசியலிலும் படிப்பிலும் சமநிலையை ஏற்படுத்துவது பற்றி சிந்திப்பேன். உயர்கல்வி பயில ஆசை இருக்கிறது, ஆனால் எனது முதல் இலக்கு பள்ளிப்படிப்பை முடிப்பது தான். அதன்பின்னரே பட்டதாரி ஆகுவது குறித்து நினைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் சுமார் 30 எம்.எல்.ஏ.க்கள், 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான கல்வி தகுதியை மட்டும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...