ஆண்டுக்கு
இரண்டு முறை ஆன்லைனில் நீட் தேர்வை நடத்தலாமா என்று தேர்வை நடத்தும்
என்டிஏ, மத்திய சுகாதார அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது.
நாடு
முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு நீட்
எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வைக் கடந்த ஆண்டு
சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இந்நிலையில்
தற்போது தேர்வுகளை இருமுறை நடத்துவது குறித்து என்டிஏ எனப்படும் தேசியத்
தேர்வுகள் முகமை, மத்திய சுகாதார அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது.
இதுபற்றி
என்டிஏ அதிகாரிகள் கூறும்போது, ''கடுமையான போட்டித் தேர்வு என்பதால்
இத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கூடுதலான மன அழுத்தத்துக்கு
ஆளாகின்றனர். இதனால் இத்தேர்வை ஆண்டுக்கு இரு முறை நடத்தினால்,
மாணவர்களுக்கு அழுத்தம் குறையும். எனினும் இதற்கு மத்திய சுகாதார
அமைச்சகத்தின் அனுமதி தேவை. நீட் தேர்வைப் பொறுத்தவரையில் என்டிஏ என்பது
தேர்வை நடத்தும் அமைப்பு மட்டுமே.
தற்போது காகித முறையில் நீட்
தேர்வு நடைபெற்று வருகிறது. இதை ஆண்டுக்கு இரண்டு முறை என நடத்தும்போது
தேர்வுக்கு ஏராளமான ஏற்பாடுகளைக் கூடுதலாகச் செய்ய வேண்டி இருக்கும்.
இதனால் ஆன்லைனில் ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வை நடத்தலாமா என்பது
குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்.
இந்த
ஆண்டு ஜேஇஇ மெயின் 2021 தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் 23 முதல் 26ஆம் தேதி
வரை தேர்வு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே
மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெற உள்ளது. ஜேஇஇ தேர்வுகளையும்
தேசியத் தேர்வுகள் முகமையே நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...