NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி

IMG_20200802_193817

* 110 சதவீதம் பாதுகாப்பானது

* மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த இரு தடுப்பூசிகளும் 110 சதவீதம் பாதுகாப்பானவை என மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உறுதி அளித்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் சீரம் மருந்து நிறுவனம் பரிசோதனை மற்றும் உற்பத்தி செய்யும் உரிமத்தை பெற்றுள்ளது. இதேபோல் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளன. இவ்விரு தடுப்பூசிகளையும் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என மத்திய அரசின் நிபுணர் குழுவானது கடந்த வெள்ளியன்று பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து, 2 தடுப்பூசிகளையும் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு நேற்று அனுமதி அளித்தது. 


இது தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி சோமானி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:  கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு, நிபுணர்கள் குழு பரிந்துரைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு சிறிய அளவு இருந்தாலும், நாங்கள் அனுமதி அளித்திருக்க மாட்டோம். இந்த இரு தடுப்பு மருந்துகளும் 110 சதவீதம் பாதுகாப்பானவை. இந்த மருந்தை செலுத்தும் போது லேசான காய்ச்சல், உடல்வலி, ஒவ்வாமை போன்றவை லேசாக ஏற்படும். இந்த அறிகுறிகள் எந்தத் தடுப்பு மருந்தைச் செலுத்தினாலும் வரக்கூடிய பொதுவான அறிகுறிகள்தான். ஆனால், இந்த மருந்தைச் செலுத்தினால் ஆண்மைக் குறைபாடு ஏற்படும் எனக் கூறுவது தவறானது.

மருத்துவ பரிசோதனையின் போது திரட்டப்பட்ட பாதுகாப்பு மற்றும் நோய்எதிர்ப்புக் சக்தி குறித்த புள்ளிவிவரங்கள், வெளிநாடுகளில் பரிசோதனையின் போது பெறப்பட்ட புள்ளிவிவரங்களையும் இருநிறுவனங்களும் அளித்துள்ளன. ஒட்டுமொத்தமாக இந்த இரு தடுப்பு மருந்துகளும் 70 சதவீதம் வீரியத்தன்மையுடன் இருக்கின்றன. இந்த இரு நிறுவனங்களும் தொடர்ந்து இறுதிகட்ட மருத்துவ பரிசோதனையில் ஈடுபடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மேலும், கேடிலா மருந்து நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கும் மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் இந்தியாவில் தனது கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களுக்கு பெருமை

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், “அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள 2 தடுப்பு மருந்துகளும் இந்தியாவில் தயாரிக்கப்படுவது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கிறது. இது சுயசார்பு இந்தியாவின் கனவை நிறைவேற்றுவதற்கான நமது விஞ்ஞான சமூகத்தின் ஆர்வத்தை காட்டுவதாக உள்ளது. இதன் ஒவ்வொரு வேரிலும் அக்கறையும், இரக்கமும் இருக்கிறது. கொரோனா இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதில் தீர்க்கமான திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. கடினமாக உழைத்த விஞ்ஞானிகள், மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்.  சீரம் மற்றும் பாரத் பயோடெக் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது ஆரோக்கியமான மற்றும் கொரோனா இல்லாத நாட்டிற்கான பாதையை துரிதப்படுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

மிகப்பெரிய திருப்புமுனை

சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது டிவிட்டர் பதிவில், “கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இது மிகப்பெரிய திருப்புமுனை. தேர்தல் வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 96 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் கட்டமாக, ஒரு கோடி மருத்துவப் பணியாளா–்கள், 2 கோடி முன்கள பணியாளர்கள் என மொத்தம் 3 கோடி பேர்களுக்கு இலவச தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.  மேலும், இரண்டாம் கட்டமாக ஜூலை மாதத்திற்குள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளிட்ட 27 கோடி முன்னுரிமை பயனாளர்களுக்கு எவ்வாறு தடுப்பூசி போடுவது என்பது குறித்த விரிவான நடைமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. தடுப்பூசி தொடர்பான தவறான வழிகாட்டுதல்களையும் வதந்திகளையும் யாரும் நம்ப வேண்டாம்’’ என கூறி உள்ளார்.

* இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளதை உலக சுகாதார நிறுவனம் வரவேற்றுள்ளது. 

* கோவிஷீல்ட் தடுப்பூசி விரைவில் வெளிவரத் தயாராக இருப்பதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பொன்னவல்லா கூறி உள்ளார்.

* கோவிஷீல்டு தடுப்பூசியே பிரதான தடுப்பூசியாக பயன்படுத்தப்படும் என்றும், கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் பட்சமாக வைத்திருக்கப்படும் என்றும் எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா கூறி உள்ளார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive