பச்சை முட்டை மற்றும் ஆப்பாயில் சாப்பிடுவதை தவிர்க்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் வீட்டில் வளர்க்கும் கோழிகளை வீட்டு எல்லைகளை விட்டு வெளியில் சென்று மேய விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கோழி, வாத்து, கொக்கு ஆகியவற்றை இந்நோய் தாக்கும் அபாயம் உள்ளது. தீவனம், தண்ணீரை சுத்தமாக தட்டில் வைத்து கொடுக்க வேண்டும். வாத்து, வான்கோழி ஆகியவற்றை ஒன்றாக வளர்க்கக்கூடாது. சேவல் சண்டை நடக்கும் இடங்களில் வீட்டு சேவல்களை கொண்டு செல்ல கூடாது. ஆப்பாயில், பச்சை முட்டை ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. முழுமையாக அவித்த முட்டை அல்லது பொறித்த ஆம்லெட் ஆகியவற்றை மட்டுமே சாப்பிட வேண்டும்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமெடுத்து வரும் பறவை காய்ச்சல் கேரளாவில் வாத்து மற்றும் கோழிகளை தாக்கியுள்ளது. எனவே நோய் தாக்கப்பட்ட பறவை இனங்களை அதிகாரிகள் தீ வைத்து அழித்து வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி ஆகிய 3 பாதைகளில் வாகனங்கள் இயங்குகின்றன. தற்போது குமுளி மலைச்சாலையில் சாலைப்பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கம்பம் மெட்டு, போடி மெட்டு மலைப்பாதைகளில் மட்டும் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. பறவை காய்ச்சலை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு பின்பு மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். கேரள மாநிலத்தில் இருந்து எந்த பொருட்களையும் தமிழகத்துக்கு கொண்டு வரக்கூடாது என்றும், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோய்க்கு தேவையான மருந்துகளை தேவையான அளவில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீர் பறவைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக இந்த வைரஸ் கிருமி மனிதர்களை தாக்குவதில்லை என்ற போதும் சில நேரங்களில் நோய் பாதித்த பறவைகளை சாப்பிடும்போது நோய் பரவும் ஆபத்து உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொது சுகாதார நிலையங்களை மேம்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
நாம் வாங்கும் கோழி இறைச்சியில் கிருமி இருந்தால் அது சமைக்கும்போது அழிந்து விடும். முழு கோழியை அப்படியே சமைப்பது கூடாது. அரைவேக்காட்டில் சமைத்த கோழிக்கறி, முட்டை ஆகியவற்றை சாப்பிடக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...