Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக் கல்வி இயக்குநர் பணி நிலையில் மாற்றம்; மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்: பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள்

671857
பள்ளிக் கல்வி இயக்குநர் பணி அவசியம். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை  வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்துப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

’’மத்திய அரசின் கல்வி அமைச்சர் நேரடியாக ஒரு கொள்கை முடிவை நடைமுறைப்படுத்த மாநில அரசின் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர்களிடம் ஆலோசனை நடத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமையை மத்திய அரசு தட்டிப் பறிக்கப் பார்க்கிறது என்பதையும் தாண்டி, மாநில அரசைத் தேர்ந்தெடுத்த மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகும்.

அத்தகைய கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற தமிழ்நாடு அரசின் முடிவு மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முதல் படி. தமிழ்நாடு அரசின் இந்த முடிவை வரவேற்பதுடன், தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையைப் பிற மாநில அரசுகளும் பின்பற்றி இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுத்தளித்துள்ள மக்களாட்சி மாண்புகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் உயர்த்திப் பிடிக்கத் தமிழ்நாடு அரசுடன் பிற மாநில அரசுகளும் கைகோக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

பள்ளிக் கல்வி ஆணையர் பணியிடம் 2019இல் உருவாக்கப்பட்ட போதே பள்ளிக் கல்வித்துறையில் அத்தகைய பணியிடம் தேவையற்றது என்ற கருத்தைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தெரிவித்தது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தேவையற்ற பணியிடங்களை நீக்கிவிட்டு, பள்ளிகளில் கூடுதலாகத தேவைப்படும் ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை உருவாக்கி, சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் வழங்கிடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்த்தோம்.

எதிர்பார்ப்பிற்கு மாறாக, பள்ளிக் கல்வி  இயக்குநர் பணி வகித்தவரை இடம் மாற்றி, அந்தப் பணியிடத்தை இந்திய ஆட்சிப் பணி அலுவலர் வகிக்கும் பணியிடமாக மாற்றிடும் வகையில் பள்ளிக் கல்வி ஆணையர், பள்ளிக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றுவரை, கல்வியியல் செயல்பாடு கொண்டவரையே தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வி இயக்குநர் பணியில் நியமித்துள்ளது. தற்போது மத்திய அரசு ஒட்டுமொத்தக் கல்வித் துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயலும் சூழலில், ஆட்சிப் பணி அலுவலர் (IAS) ஒருவரைப் பள்ளிக் கல்வி இயக்குநர் பொறுப்பில் நியமிப்பது, தமிழ்நாட்டின் தனித்தன்மையை இழக்கச் செய்யும். எந்த மாநிலத்தைச் சார்ந்தவரும் எதிர்காலத்தில் இப்பணியில் அமர்த்தப்படலாம். அத்தகைய நிலை உருவாக வழி செய்வது நியாயமான அணுகுமுறை அல்ல.


கடந்த சில ஆண்டுகளாகக் கல்வித் துறையில் பல்வேறு குழப்பமான முடிவுகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், நிலைமையைச் சீர்படுத்திட மிகப் பொருத்தமான அலுவலராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்றே கருதுகிறோம். மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றும்போது தனது மாவட்டத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பல வகையிலும் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார்.

மாநிலக் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஒருவர் ஆட்சிப் பணி அலுவலராக இருப்பதால் அவரின் திறமையையும், அரசுப் பள்ளி மாணவர்கள் மீது அவரின் அக்கறை கொண்ட அணுகுமுறையையும் பள்ளிக் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கருதி குறிப்பிட்ட நோக்கத்திற்காக, அந்த நோக்கம் நிறைவேறும் காலம் வரை இயக்குநர் பணியிடத்தில் ஓர் ஆட்சிப் பணி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறோம். மீண்டும் பள்ளிக் கல்வி  இயக்குநர் பணி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.

இயக்குநர் பணி நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தேவையற்ற விவாதமாக மாறி, கல்வியை மாநிலப் பட்டியலுக்குத் திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற நமது அடிப்படைக் கோரிக்கையில் இருந்து திசை மாற அனுமதிக்கக் கூடாது.

இந்தியாவிற்கே முன்னுதாரணமாகத் திகழும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கிட உறுதியுடன் செயல்படும் முதல்வர், மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க மாநிலக் கல்வி ஆணையத்தை அமைத்திட விரைந்து செயல்பட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை  கோருகிறது’’. இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திர பாபு  தெரிவித்துள்ளார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive