முதல்வர் ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்த பின், பல்வேறு துறைகளில் மாற்றங்கள் நடந்து வருகின்றன. பள்ளிக்கல்வி துறையில் இயக்குனர் பணியிடத்தில், கமிஷனர் அந்தஸ்தில் நந்தகுமார் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், சி.இ.ஓ.,க்கள் என்ற முதன்மை கல்வி அலுவலர்களுக்கான பணியிட மாற்றங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன.
புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனர் நந்தகுமார், சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, பள்ளிக்கல்வியில் பணியாற்றும் இயக்குனர்கள் முதல் டி.இ.ஓ.,க்கள் வரையில் உள்ள அதிகாரிகளின் மீதான, ஒழுங்கு நடவடிக்கை புகார்கள், பட்டியலாக தயாரிக்கப்பட்டுள்ளன.அரசின் இலவச திட்டங்களை சரியாக நிறைவேற்றாதது; நிதியை சரியாக கையாளாதது; உரிய அனுமதியின்றி, நீண்ட விடுப்பு எடுத்தது...
தலைமை ஆசிரியர், சி.இ.ஓ.,க்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளின் பதவி உயர்வில் விதிமீறல்; தனிப்பட்ட முறையில் தண்டனை வழங்கி, இடமாறுதல் செய்தல் போன்ற பல பிரச்னைகள், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.ஓய்வூதியம், பதவி உயர்வு, அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைத்தல்; மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்ட நிதியை பயன்படுத்தாமை என்பது போன்ற குற்றச்சாட்டு களும் இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியலில், பள்ளிக்கல்வி துறையின், பல்வேறு பிரிவுகளில் உயர் பொறுப்பில் உள்ள இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் சிலருக்கு, பல ஆண்டுகளாக ஒழுங்கு நடவடிக்கை, நீதிமன்ற உத்தரவு, புகார் மீதான குற்றச்சாட்டு பதிவு போன்றவை நிலுவையில் உள்ளன.இந்த காரணங்களால், பதவி உயர்வு, இடமாறுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இந்த பிரச்னை, புதிய அரசின் நிர்வாகத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.எனவே, நிர்வாகத்தை சீரமைக்கும் முன், அதிகாரிகளின் மீது துறை ரீதியாக பதிவு செய்யப்பட்ட புகார்களை, முடிவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஒழுங்கு நடவடிக்கை குழு விரைந்து விசாரித்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள, கமிஷனருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...