Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கணினி ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவில்லை; ஆனால், இலட்சக்கணக்கான மடிக்கணினிகள் கொடுத்து என்ன பயன்??

தமிழகத்தில் தொடரும் கணினி ஆசிரியர்களின் சோகக்கதை - தீர்த்து வைப்பாரா மாண்புமிகு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள்.

 

                  அரசு பள்ளிகளில் எப்படியேனும் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன்தான் நாங்கள் பி.எட்., படித்தோம். ஆனால், நாங்கள் படித்த பி.எட்., படிப்பு இன்று எந்தவொரு பயனும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

 

                    2011-ல் சமச்சீர் கல்வியில் 6 முதல் 10 வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவரப்பட்டது. இதனை நம்பி பெரும்பாலானோர் (65,000) பி.எட்., படித்தோம்.

 

                   ஆனால், ஆட்சி மாற்றத்தினால் இந்த மகத்தான திட்டம் கொண்டுவரப்பட்ட வேகத்திலேயே கைவிடப்பட்டது. இதற்காக ரூ.300 கோடி செலவில் கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இவைகள் பள்ளிக்கூடங்களுக்கும், மாணவர்களுக்கும் முழுமையாகச் சென்று சேரவில்லை. மேலும், பெரும்பாலான கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் இன்றுவரையில் குடோனிலேயே அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. இது மிகவும் கொடுமையான ஒரு செயலாகும்.

 

                   தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியலின் மேம்பாட்டுக்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் ரூ.900 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த நிதிப்பணமும் கணினி கல்விக்கு முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் 90,00,000 அரசு பள்ளி மாணவ-மாணவியரின் கணினிக்கல்வியும், 6,000 பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி இவர்களைச் சார்ந்த 65,000 குடும்பங்களும் இன்று தவித்து வருகின்றன. தமிழகத்தில் மட்டும்தான் இத்தனை அநீதிகள்.

 

                   அரசு பள்ளிகளில் தான் எந்தவொரு பணி வாய்ப்பும் இல்லையென்றால், தனியார் பள்ளிகளில் கூட எங்களுக்கென நியாயமான பணி வாய்ப்புகள் இல்லை. தனியார் பள்ளிகளில் பணிபுரிய கணினி ஆசிரியர்களுக்கென உரிய பணிவிதி மற்றும் பணி வரன்முறையை உருவாக்கித் தருமாறு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பலமுறை மனு அளித்தோம். ஆனால், இதுபற்றி சென்ற அரசு அதிமுக இதுவரை செவி சாய்க்கவில்லை.

 

                   அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் விரைவில் வந்துவிடும், அரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன் காத்திருந்து, காத்திருந்து மிஞ்சியது ஏமாற்றமே. கணினி ஆசிரியர் வேலையை நம்பியே பல இளைஞர்கள் திருமண வயதைக் கடந்துவிட்டார்கள். அரசு வேலை விரைவில் கிடைத்துவிடும் என நம்பியே பல யுவதிகள் முதிர்கன்னிகளாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் அவலம் தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைத்த சாபம்.

 

                   தமிழகத்தின் அண்டை மாநிலங்களின் அரசு பள்ளிகளில் 'கணினி அறிவியல்' இன்று ஒரு முக்கியப் பாடமாக உள்ளது. தமிழகத்திற்குப் பிறகுதான் கேரளாவில் “கணினி அறிவியல்” பாடம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியலுக்கும் மற்ற பாடங்களைப் போல் கட்டாயத் தேர்ச்சி முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவது தமிழகத்திற்கு பெரும் பின்னடைவே.

 

                   தமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்., படித்து முடித்துவிட்டு சுமார் 65,000 பட்டதாரிகள் (ம) முதுநிலைப் பட்டதாரிகள் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். படித்தது முதல் இன்றுவரையில் இவர்கள் சொல்லவண்ணா துயரங்களை அடைந்து வருகிறார்கள்.

 

                   கசாப்புக் கடை முதல்... கரும்பு வெட்டும் தொழிலாளி வரை... கணினி ஆசிரியர்களின் துயரச் சித்திரம் நீண்டுகொண்டேதான் செல்கிறது. எங்களுக்கான விடியல் என்றுதான் கிடைக்கும்? என்று ஒவ்வொரு நாளும் இவர்கள் குமுறுகிறார்கள்...

 

                   தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 2011-லிருந்து மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 2011-லிருந்து 2020-வரை 1414 கணினி ஆசிரியர்கள் மட்டுமே 'அரசு' தரப்பிலிருந்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். கணினி ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவில்லை; ஆனால், இலட்சக்கணக்கான மடிக்கணினிகள் கொடுத்து என்ன பயன்??

 

                   மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் மடிக்கணினிகளும், இனி இலவசமாக வழங்கப்பட இருக்கும் 'டிஜிட்டல் டேப்லட்டுகளும்' கணினி ஆசிரியர்களின்றி எவ்வாறு முழு பயனை அளிக்கும்..?? பி.எட்., முடித்த கணினி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமனம் செய்ய சென்ற தமிழக பெரியதொரு முயற்சி ஏதும் செய்யாமலே போனது.   

                         

                   10 வருடங்களுக்கும் மேலாக, பி.எட்., கணினி பட்டதாரிகளுக்காகவும், பள்ளி கல்வித்துறையில் கணினி அறிவியல் துறையின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் கணினி ஆசிரியர்கள் தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு கணினி ஆசிரியர்களுக்கென எந்தவொரு திட்டத்தையும் இதுவரை செயல்படுத்தாதது வேதனையளிக்கிறது.

 

 

                   கணினி அறிவியலின், கணினி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டங்கள் செய்யப்பட்டன. அரசு இதனை கண்டுகொள்வதாக இல்லை.

 

                   வரும் கல்வியாண்டிலாவது விடியல் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் கணினி ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

 

   

                                               

 

          உலகமே கணினியை கொண்டாடுகிறது...

                   ஆனால், தமிழக அரசு பள்ளிகளில் போதிய கணினி ஆசிரியர்களின்றி, உரிய வழிகாட்டுதலின்றி பொதுத்தேர்வை எழுதச் செல்லும் எமது மாணவச் செல்வங்களை நினைத்தால் கண்ணீர் தான் வருகிறது...

 

image.png

   D. வேலு, M.Sc., B.Ed., Cell:9751894315

(மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்)

தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்  💻

பதிவு எண் ® 655/2014  

TNBEDCSVIPS

தினமும் என்னை கவனி..!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive