தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், தங்கள் படிப்பு முடிந்து உயர் கல்வி பயிலச் செல்லும்போது இடைநிற்றலைத் தவிர்க்க, தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
2011-12-ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின்கீழ், 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.1,500, பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் (2020-21) சிறப்பு ஊக்கத்தொகை வழங்குதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக, தகுதி பெற்ற மாணவ, மாணவிகளின் விவரங்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டன. அதில் கணிசமான மாணவர்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும்
அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை யில், "2020-21-ம் கல்வியாண்டு சிறப்பு ஊக்கத்தொகை பெறுவதற்குத் தகுதியான 10, 11, 12-ம் வகுப்பு படித்த மாணவர்களின் விவரங்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளால் ஏற்கெனவே அனுப்பிவைக்கப்பட்டது. அவற்றை ஆய்வு செய்ததில், பல்வேறு மாணவர்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட தகவல்கள் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, விடுபட்ட தகவல்களை மீண்டும் பதிவுசெய்து, முழு விவரங்களையும் சரிபார்த்து, பின்னர் அவற்றைத் தொகுத்து அனுப்ப முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...