கல்வித் தொலைக்காட்சிக்கு 4 சேனல்கள் தொடங்க ஆலோசனை: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

கல்வித் தொலைக்காட்சிக்கு 4 சேனல்கள் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி எடமலைப்பட்டிப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி இன்று ஆய்வு நடத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

''அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவ- மாணவிகளைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, ஆசிரியர்கள் பற்றாக்குறையைக் களைய நடவடிக்கை எடுப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து அரசுப் பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்து வருகிறேன்.

ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 1-ம் தேதி நடைபெறும் பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் அளிக்க உள்ளேன். அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்தும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நிறைவேற்றப்படும்.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் விரிவான அறிக்கை வந்த பிறகு, நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய முடிவை அறிவிப்பார்.

தற்போது கல்வித் தொலைக்காட்சிக்கு ஒரு சேனல் மட்டுமே உள்ள நிலையில், மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை, 9 மற்றும் 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என 4 சேனல்கள்  தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். பள்ளிகளில் ஆசிரியர்- மாணவர் விகிதம் 30:1 என்ற அளவில் அமல்படுத்தப்படும்''.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive