தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து பள்ளிகளிலும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துறைசார் இயக்குநர்கள், முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் காணொலி காட்சி வாயிலாக இன்று (மே 27) கலந்துரையாடினார்.
அப்போது பள்ளிகள் திறப்பை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் அவர் வழங்கினார். பள்ளி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி மாணவர்கள் வருகைக்கு முன்னர் பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பள்ளி வளாகங்களின் கட்டிடங்கள், மின் இணைப்பு பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இடைநின்றவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும்.
மாணவர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதிசெய்ய வேண்டும். உடற்கல்வி பாடவேளையை முழுமையாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மாணவர் சேர்க்கையில் கடந்தாண்டைவிட குறைந்தது 50 பேரை கூடுதலாகச் சேர்க்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் உட்பட நலத்திட்டங்களை மாணவர்களுக்கு முறையாக வழங்கிட வேண்டும்.
இணையப் பாதுகாப்பு மற்றும் இணையவழி குற்றங்களில் இருந்து மாணவர்களைத் தற்காத்து கொள்ளவும் தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும். மாணவர்களுக்கான நன்னெறி வகுப்புகளை வாரந்தோறும் நடத்த வேண்டும். இதுதவிர கிராமப்புறப் பகுதிகளில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உரிய பேருந்து வசதிகள் இருப்பதை அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும். சில தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் முழுமையாக செலுத்தாத மாணவர்களின் மாற்று சான்றிதழ்களை வழங்காமல் உள்ளன.
அத்தகைய பள்ளி நிர்வாகங்களுடன் தொடர்பு கொண்டு பேசி மாணவர்கள் சான்றிதழ்களை பெற்று கல்வியை தொடர வழிசெய்ய வேண்டும். மேலும், தனியார் பள்ளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவற்றில் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுதவிர அங்கீகாரமின்றி செயல்படும் நர்சரி பள்ளிகள் மீது எவ்வித பாராபட்சமின்றி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே நமது முக்கிய கடமையாகும்.
எனவே, அதிகாரிகள் அலுவலத்தில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ளாமல், அவ்வப்போது பள்ளிகளில் திடீர் ஆய்வுகளை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும். மேலும், 10, 12-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதும் மாணவர்களை வரவழைத்து சிறப்பு பயிற்சிகள் வழங்கி அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களை, இந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்டன.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...