OneZ Quiz App Download

Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

மன அழுத்தத்தால் அவதிக்குள்ளாகும் ஆசிரியர்கள் _ மருத்துவரின் முகநூல் பதிவு!!!

1000711377 
சமீபத்தில் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் என்னைப் பார்க்க ஆசிரியர் ஒருவர் வந்திருந்தார். அரசுப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணியாற்றுகிறேன் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். அவரை முழுமையாக பரிசோதித்தபோது தான் தெரிந்தது, அவருக்குத் தீவிர மன அழுத்தம் இருப்பது. 

மன அழுத்தத்திற்கான காரணத்தைக் கேட்டறிந்தேன். பொதுவாக நடுத்தர வயதுடைய ஆண்கள், மன அழுத்தம் என்று வரும்போது இரண்டு பிரதான காரணங்களைத் தான் முன்வைப்பர்.

1. குடும்பப் பிரச்சினை 

2. கடன் பிரச்சினை 

ஆனால், இவர் சொல்லிய காரணம் தனித்துவமாக இருந்தது. 

'சார்... இந்தக் காலத்துப் பசங்கள எப்படி சமாளிக்கறதுனே தெரியல சார். சொல்றத கொஞ்சம் கூட கேக்க மாட்றாங்க. ஆளாளுக்கு ஒரு போதை பொருள் யூஸ் பண்றாங்க. ஏதேதோ பேரு சொல்றாங்க. எனக்கு அதெல்லாம் என்னென்னே தெரியல சார். மத்த டீச்சர்ஸ் மாதிரி என்னால் அமைதியா போக முடியல. அதுவே யோசனையா இருக்கு சார்'

அவரை உற்றுப்பார்த்தேன். 

மன அழுத்தம் என்பதையும் தாண்டி, இன்றைய மாணவ சமுதாயத்தை நினைத்து பெரும் பதற்றத்தில் அவர் இருக்கிறார் என்பது தெரிந்தது. அவருக்குத் தேவையான சிகிச்சையை அளித்து அனுப்பி வைத்தேன்.

மாவட்ட மனநலத்திட்டம் சார்பாக, பள்ளிகளில் மனநலம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம். ஒவ்வொரு பள்ளியிலும் நிகழ்ச்சி ஆரம்பமாகும் முன்பு தலைமை ஆசிரியர் ஓடிவந்து, 'சார்... இந்த கூல் லிப் பத்தி கொஞ்சம் பேசுங்க' என்பார். நானும் போகும் இடமெல்லாம் கூல் லிப் பற்றி தவறாமல் பேசி வருகிறேன். ஆனாலும் இதன் புழக்கம் ஒரு புற்றுநோய் போல வளர்ந்துகொண்டே தான் இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

பள்ளியில் பாடம் கவனிக்கும்போதே மாணவர்கள் இந்த கூல் லிப்பைப் பயன்படுத்துகிறார்கள். கூல் லிப் மட்டுமல்ல; கஞ்சாவும் கணிசமான அளவில் பிள்ளைகளின் எதிர்காலத்தோடு விளையாடுகிறது. ஆசிரியர்களுக்கு மாணவர்களின் இந்த போதைப் பயன்பாடு குறித்து நன்றாகவே தெரியும். ஆனாலும் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். 

காரணம்?

மாணவர்கள் வெளிப்படுத்தும் நியாயமற்ற கோபம்.

ஆம்... தட்டிக்கேட்டால் ஆசிரியர்கள் மீதே வன்முறை நிகழ்த்தப்படுகிறது. அல்லது தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள். 
 
சென்றாண்டு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.

கோவையில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில், கூல் லிப் பயன்பாடு குறித்து 8ஆம் வகுப்பு மாணவன் ஒருவனிடம் தலைமை ஆசிரியர் கேட்டிருக்கிறார். உடனே அவன் பள்ளியின் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்திருக்கிறான். அதில் அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. விசாரணை என்ற பெயரில் போலீஸ் தரப்பிலிருந்து தலைமை ஆசிரியருக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தங்களை தனிப்பட்ட முறையில் நான் நன்கு அறிவேன். வேறு இடத்துக்கு அவர் பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டார்.

நான் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றியபோது, வழக்கமான ஒரு விழிப்புணர்வு கூட்டத்திற்காக புதுக்கோட்டை சிறைக்குச் சென்றிருந்தேன். கைதிகள் வரிசையாக அமர்ந்திருந்தனர். அதில் ஒருவர் மட்டும் அதீத கூச்சத்துடன் முகத்தை வெளியே காட்டாமல் கீழே குனிந்தபடி உட்கார்ந்திருந்தார். கூட்டம் முடித்தபிறகு அவரைத் தனியாக அழைத்துப் பேசினேன். ஆரம்பத்தில் பேசத் தயங்கிய அவர், நீண்ட நேரத்திற்குப் பிறகே தன்னுடைய பிரச்சினையை விவரித்தார்.

'சார்... நான் ஒரு மேக்ஸ் டீச்சர் சார். கவர்மென்ட் ஸ்கூல்ல தான் வேல செய்றேன். 20 வருசம் சர்வீஸ் சார். ஒரு ப்ளாக் மார்க் கூட இருந்தது இல்ல. அடுத்த வருசம் நல்லாசிரியர் விருதுக்கு என்னோட பேரும் பரிந்துரை லிஸ்ட்டில் இருக்கு...'

சொல்லிக்கொண்டே போனவர் ஒரு கட்டத்தில் உடைந்து அழுந்தார். அவரை ஆற்றுப்படுத்தி மீண்டும் பேச வைத்தேன்.

'15 வயசு பொண்ணு சார். என்னோட ஸ்டூடன்ட். க்ளாஸ் டைம்ல ஏன்மா சிரிச்சிட்டு இருக்கனு தான் கேட்டேன். உடனே வீட்டுக்குப் போய் நான் அந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துகிட்டேன்னு சொல்லிடேச்சு. என்ன ஏதுனு கூட கேக்காம அரெஸ்ட் பண்ணி உள்ள வச்சுட்டாங்க சார். எனக்கு இதே வயசுல ஒரு பொண்ணு இருக்கா சார். அவ என்னப்பத்தி இப்போ என்ன நினைக்கிறானு கூட எனக்குத் தெரியல...'

அழுதுகொண்டே உள்ளே சென்ற அவர், 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலியாக குற்றஞ்சாட்டப்பட்டு, சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் பிரதிபலித்தார். 

இப்படி இருபால் மாணவர்களிடம் இருந்தும் சமமான அளவில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள் ஆசிரியர்கள். அதுவும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தான் இந்த நெருக்கடி அதிகளவில் இருப்பதை நான் பார்க்கிறேன்
 
என்னுடைய பள்ளிக்காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். நாறு மாணவர்களில் ஓரிரண்டு பேர் சிகரெட் பிடிப்பார்கள் (12ம் வகுப்பு). அவர்களை மற்ற மாணவர்கள் தள்ளி வைத்தே பார்ப்பர். அப்போது கஞ்சா என்பது கெட்ட வார்த்தையாக இருந்தது. நிஜாம் பாக்கை போதை பொருள் என்று நம்பினோம். ஆனால், இன்று 5ம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்குக் கூட கூல் லிப்பின் ரகசிய வார்த்தை தெரிந்திருக்கிறது. 

'கூல் லிப்ப என்னனு சொல்லிடா கடைல வாங்குவிங்க?' என்றால், அடுத்த வினாடியே 'தலகாணி சார்' என்ற பதில் பறந்து வருகிறது. 

ஆம்... கூல் லிப்பின் ரகசிய வார்த்தை அதுதான். கடைக்குச் சென்று 'ரெண்டு தலகாணி கொடுங்க...' என்று கேட்டால் கூல் லிப்பை எடுத்துத் தருவார்கள். இது ஆசிரியர்கள் பலருக்கே தெரியாது!
 
ஒவ்வொரு முறையும் பள்ளிக்குச் செல்லும்போது, 'சார்... பசங்க மனநலம் பத்தி பேசறீங்க. முதல்ல ஆசிரியர்கள் எங்களுக்கு கவுன்சிலிங் கொடுங்க சார். நாங்க தான் இந்த பசங்களால நிறைய ஸ்ட்ரெஸ்ல இருக்கோம்...' என்பார்கள்.

முன்பெல்லாம் பாடம் நடத்துவது, விடைத்தாள் திருத்துவது, மாணவர்களை வழிநடத்துவது போன்ற சமூக வளர்ச்சிக்குத் தேவையான வேலைகளில்தான் ஆசிரியர்கள் ஈடுபடுவர். 

இப்போது அப்படி இல்லை. 

தினமும் டேட்டா பதிவேற்றம் செய்யச் சொல்கிறார்கள். மீட்டிங் வைக்கிறார்கள். டார்கெட் அச்சீவ் செய்யச் சொல்கிறார்கள். ஏதோ இன்சூரன்ஸ் கம்பெனி போன்று இருக்கிறது அல்லவா? ஆனால், உண்மையில் இதுதான் நடக்கிறது. இதனால் பள்ளியைத்தாண்டி வீட்டுக்கு வந்தும் அவர்களுடைய வேலை தொடர்கிறது. இதனால் மாணவர்களிடமும் குடும்பத்தினரிடமும் அடிக்கடி தங்களது தேவையற்ற கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள் ஆசிரியர்கள். பின்பு குற்ற உணர்வு உண்டாகி மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
 
இப்படி மாணவர்கள் தரும் அழுத்தம் ஒருபக்கம், மேல் இடம் தரும் அழுத்தம் ஒருபக்கம் என இரண்டு பக்கமும் அடிவாங்கும் மத்தளம் போலாகிவிட்டது இவர்களுடைய நிலைமை.

இன்று குழந்தைகள் தினம். குழந்தைகளின் மனநலம் காக்கப்பட வேண்டுமெனில் ஆசிரியர்களில் மனநலம் காக்கப்பட வேண்டும். அதற்கு அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் குறைக்கப்பட வேண்டும். அது நாம் அனைவரின் கைகளில் தான் இருக்கிறது. 

நம் கைகளிலா? எப்படி?

உங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டால், 'இனி எல்லாத்தையும் மேல இருக்கறவன் பாத்துப்பான்...' என்கிற ரீதியில் அவர்களை அப்படியே விட்டுவிடாதீர்கள். அவ்வபோது ஆசிரியர்களிடம் உரையாடுங்கள். பள்ளியில் பிள்ளைகளுடைய நடவடிக்கைகளைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகளின் மனநலம் சீராக செயல்பட ஆசிரியர்களோடு சேர்ந்து உங்களுடைய பங்களிப்பும் மிக மிக அவசியமான ஒன்று.

குழந்தைகளைக் கையாள முடியாமல் ஆங்காங்கே சிக்கித் தவித்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.

- எஸ். சரத்குமார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive