சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயம்: அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது

          தமிழக அரசு பாட திட்டத்தை கடைபிடித்து வரும் பள்ளிகளில் மட்டும் அமலில் இருந்து வரும் கட்டாய தமிழ் பாட சட்டம், அடுத்த ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ., பள்ளி உட்பட, அனைத்து வகை மத்திய அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இது தொடர்பான அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
         முந்தைய தி.மு.க., ஆட்சியில், பத்தாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும், கட்டாயம் தமிழ் பாடம் படிக்கும் வகையில், தனி சட்டம் கொண்டு வரப்பட்டது.தமிழக அரசு பாடத்திட்டத்தை கடைபிடிக்கும், நர்சரி, பிரைமரி, ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில், கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டம் அமலில் இருந்து வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு வரை, தமிழ் பாடம் கட்டாயமாக உள்ளது.அடுத்த கல்வி ஆண்டில், அனைத்து பள்ளி மாணவர்களும், தமிழ் பாடத்தில், பொது தேர்வு எழுதுவர். கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தை அமல்படுத்தும்போது, மத்திய அரசு பாடத்திட்டத்தை அமல்படுத்தும், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட பள்ளிகளுக்கு, விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
உத்தரவு:
இந்நிலையில், 'சி.பி.எஸ்.இ., உட்பட, அனைத்து வகை மத்திய அரசு பாட திட்டத்தை அமல்படுத்தும் பள்ளிகளிலும், அடுத்த ஆண்டு முதல், தமிழ் பாடம் கட்டாயம் கற்பிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, கடந்த 18ம் தேதியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2006ல் இயற்றப்பட்ட கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தின் கீழ், தமிழக அரசு பாட திட்டத்தை சேராத இதர பள்ளிகளும், அடுத்த ஆண்டு முதல், தமிழ் பாடத்தை கட்டாயம் கற்பிக்க வேண்டும்.அடுத்த கல்வி ஆண்டில் (2015 - 16), முதல் வகுப்பில், தமிழ் பாடம் கற்பிக்க வேண்டும். பின், படிப்படியாக, அடுத்தடுத்த வகுப்புகளுக்கு, தமிழ் பாடம் நீட்டிக்கப்படும். 2024 - 25ம் ஆண்டில், பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் பாடம் இடம் பெறும்.இவ்வாறு, அரசாணை யில் கூறப்பட்டுள்ளது.
விருப்ப பாடம்:
பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் கூறியதாவது:தமிழ் அல்லாத பிற மொழியை, தாய் மொழியாக கொண்ட மாணவர்களும், கண்டிப்பாக, தமிழ் பாடத்தை கற்க வேண்டும்.பொது தேர்வில், மொழிப்பாட வரிசையில், தமிழ் பாடம் தான் இடம் பெறும். ஆனால், தமிழ் அல்லாத பிறமொழி பாடத்தை, விருப்ப பாடமாக படிக்கலாம்.இவ்வாறு, இயக்குனர் தெரிவித்தார்.
கவர்னர் ஒப்புதல்:
தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்று, 565 தனியார் பள்ளி; 41, கேந்திரிய வித்யாலயா பள்ளி; 2, நவோதயா வித்யோதயா பள்ளி, ஒரு சைனிக் பள்ளி இயங்கி வருகின்றன.கட்டாய தமிழ் பாடத்தை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் விரிவுபடுத்தும் சட்ட திருத்தத்திற்கு, கவர்னர், ரோசய்யா ஒப்புதல் அளித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive