Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்வெர்ட்டர் - ஒரு சிறிய அலர்ட்!


         ஒரு இனிய வெள்ளி மாலைப் பொழுது, வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வருகையிலேயே, என்ன வீட்டில் நாறுது என்று கேட்டவாறே அமர்ந்தான். எனக்கும், கணவருக்கும், குழந்தைக்கும் வெயிலின் தாக்கத்தால் ஜலதோஷம் என்பதால், ஒன்றும் தெரியவில்லை.
 
         பத்து நிமிடங்களில் வீட்டை அல்லோகலப் படுத்தினான். உங்க யாருக்கும் ஸ்மெல் தெரியலையா, வீட்டுக்குள்ள இருக்கவே முடியல, "சென்னை'ல குப்பைத்தொட்டிய தாண்டும் போது நாறுற மாதிரி இருக்கு வீடு" என அவன் சொன்னதும் இருவரும் அதட்டினோம். "நீ போய் குளிச்சிட்டு வா" என. வந்தவன், மீண்டும் அலறினான், இருக்கவே முடியல, குமட்டுது என. ஜன்னல்களை அடைத்தான், வீடு முழுவதும் ரூம் ஸ்ப்ரே அடித்தான், செண்ட் எடுத்து உடலில் பூசினான்... பத்தி ஏற்றினான்... எல்லாம் முடித்து விட்டு சொன்னான், இப்பொழுது பரவாயில்லை என. 


கணனியில் இருந்து எழுந்து வீடு முழுவதும் சுற்றி வந்தோம். ஒரு வித்தியாசமும் கண்டு பிடிக்க இயலவில்லை, ஒரு சின்ன நாற்றம் உணர்ந்தது போலும் இருந்தது, இல்லாதது போலும் இருந்தது. இரவு முடிந்து மறுநாள் காலையும் வந்தது, காலை எழுந்ததும் மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்தான், இன்று வீடு பெருக்குகையில் பார்க்கிறேன் என நானும் கூறினேன். பெருக்குகையில் பாட்டரி மிகுந்த கனம் ஆதலால், என்னால் நகர்த்தி வைக்க இயலவில்லை.ஆனால், அச்சமயத்தில், நானும் ஒரு சிறிய நாற்றம் உணர்ந்தேன். மீண்டும் மாலை, மீண்டும் மகனின் இதே புலம்பல். வீட்டீல் அடைசலாக பொருட்கள் இல்லாததால், "ஏதோ, பல்லி இடுக்கில் மாட்டி செத்து இருக்கலாம், வேற எங்கேயும் மாட்ட வாய்ப்பு இல்ல, அந்த இன்வெர்ட்டர் பாட்டரியை நகற்றி, அதன் அடியில் மட்டும் பார்த்துடுங்க" என கணவரிடம் கூறினேன். மகன் வெளியில் விளையாடச் சென்று விட்டான், நானும் மறந்தேன். ஒரு மணி நேரம் கழித்து சென்று பார்க்கும் போது, பாட்டரிக்கு மின்விசிறி வைத்து இருந்தார் கணவர். என்ன ஆச்சு எனக் கேட்ட பொழுது, மழுப்பலாக வந்தது பதில், இன்வெர்ட்டர் பேட்டரி ஓவர் ஹீட் ஆகி விட்டது, அதான் நாறி இருக்கிறது போல என. முழித்து விட்டு, ஏன் நாற்றம் எனக் கேட்டேன், அப்படி எதுவும் இல்லை என்றார்... 

சற்று நேரம் கழித்து, நான் மீண்டும் அந்த அறைக்கு வந்த பொழுது, கணவர் மயங்கி இருந்தார், என்ன, ஏதேன புரியவில்லை, கையும் காலும் ஓடவில்லை. முகத்தில், தண்ணீர் தெளித்தும் பலனில்லை. உடனே உறவினர்களை அழைத்து, மருத்துவமனையில் சேர்த்தேன். மருத்துவர் என்ன என கேட்ட பொழுது, எதுவுமே கூற இயலவில்லை. குழப்பத்தில் சம்பவங்களை கோர்த்து பார்த்ததும், திடீரென, பாடத்தில் படித்தது நினைவு வந்தது, பேட்டரி ஒவர் ஹீட் ஆனால், ஏதோ வாயு உற்பத்தி செய்யுமே என. உடனே, கூகுளினேன். 

எந்த லெட் ஆசிட் பாட்டரியும் அதீத சார்ஜ் ஆகுகையில், அது "ஹைட்ரஜென் சல்பைட்" எனும் வாயுவை வெளியிடும். அந்த வாய்வு, அழுகிய முட்டையின் நாற்றம் கொண்டது. அந்த வாய்வு, சுவாசித்ததும், கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும், அளவு அதிகமாகினால், நுரையீரலில் எரிச்சல் ஏற்படுத்தும், இன்னும் அளவு அதிகமாக, இருமல் துவங்கும், நறுமண அரும்புகள் செயலிழக்கும், மயக்கம் ஏற்படும், ஒரு மணி நேரத்தில் மரணம்... மூச்சே நின்றது. படிக்கையில் கதைகளில் வருவது போல், உலகமே காலின் கீழ் நழுவியதை உணர்ந்தேன். அது குழந்தைகளை விட, பெரியவர்களை அதிகம் பாதிக்கும், ஏனெனில் நுரையீரலின் கொள்ளிடம் அதிகம் எனவும் போட்டு இருந்தது. 

ஓடிச் சென்று மருத்துவரிடம் விபரம் தெரிவித்தேன். ஏதேதோ செய்தார் மருத்துவர், அரை மணி நேரத்தில், கண் விழித்தார் கணவர். போன உயிர் திரும்பியது. "என்ன ஆச்சுப்பா" என்றேன். அது ஒரு காஸ் ரிலீஸ் பண்ணும், அது லேசா மயக்கம் வந்துடுச்சு, என்றார். குழந்தையை காண்பித்து, தான் சிறிது பயந்ததாகவும், என்னை பயப்படுத்த விரும்பாததாகவும் தெரிவித்தார். பாட்டரியை நகர்த்துகையில் அதன் அதீத சூடு கையில் பட்டதும், அது ஓவர் சார்ஜ் ஆகி இருக்கிறது என உணர்ந்தேன். அதனால் வந்த, நாற்றமே எனவும் தெரிந்தது. அனைவரும் வெளியில் சென்று விடலாம், என யோசிக்கத் துவங்குகையில் கண் இருட்டிக் கொண்டு வந்து விட்டது என்றார். மருத்துவரும், ஒன்றும் பிரச்சனை இல்லை, ஒரு சிறிய அலர்ஜிதான் எனக் கூறி, இன்று இரவு தங்கி விட்டு செல்வது நல்லது என்றார். ஏதும் பிரச்சனை என்றால் வருகிறோம் என்று விட்டு, உறவினர்களின் அட்வைஸ்களையும் மருந்துகளையும் வாங்கிக் கொண்டு இருட்டியதும், வீடு வந்து இறங்கினோம். 

இறங்கவும், இருமத் துவங்கினார். இருமல் எனில், சாதாரண இருமல் இல்லை, டி.பி'காரர்கள் இருமுவதைப் போல், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு. இடைவிடாத 3 நிமிட இருமல். மீண்டும் கூகுள், தேடலில், அது நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்தினால், இருமல் இருக்கும் எனவும் அது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இருக்கும் எனவும் அறிந்தோம். மூன்று நாட்களாகியும் இருமல் அதிகரித்ததே அன்றி, குறைந்த பாடில்லை. பின், ஒரு ஆயுர்வேத மருத்துவரிடம் சென்று, கை நாடித்துடிப்பு பார்த்து, விஷம் முறிக்கவும், தொடர் இருமலுக்கும் ஒரு மாதத்திற்கு மருந்து எடுத்தே ஆக வேண்டும் என்றதும், தேவையான மருந்துகளையும் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினோம். வந்ததும் வீடு முழுவதும் சாம்பிராணி புகைத்தோம். 

ஆனால், கூகுளில் போட்டு இருந்ததைப் போல், கண்ணில், மூக்கில் எந்த எரிச்சலும் இல்லை. சாதாரண நாற்றம் தானே என அலட்சியப் படுத்தியதற்கான பலன் இது. மகன் வெளியில் சென்று விடுவான். குழந்தை பாதிக்கப் படாமல் இருந்தது அதிசயமே. பிரச்சனை எங்கிருந்தோ வர வேண்டும் என்பதல்ல, பாட்டரியில் இருந்தும் வரலாம். இன்னும் அளவு கொஞ்சம் அதிகமாகி இருந்தால், நினைக்கவே பயமாக இருக்கிறது.... கவனமாக இருங்கள் நட்புகளே....




3 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive