மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தமிழகத்தில் உள்ள
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 2018-19 ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் பள்ளிகளில் செய்யவேண்டிய பணிகள் குறித்து அதன் நிர்வாகத்தினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
அதன் அடிப்படையில் கோடை விடுமுறை முடிந்து 2018-19 கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கும் போது பள்ளிக் கட்டிடம் முழுமையான கட்டமைப்பு வசதியுடனும், உயர்தர சுகாதார பொலிவுடனும் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
எனவே மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்தின் வழிகாட்டுதல்களை தவறாது பின்பற்றி பள்ளி திறக்கும் நாளுக்கு முன்னரே செயல்படுத்திட அனைத்து மெட்ரிகுலேஷன் , மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தினருக்கும், முதல்வர்களுக்கும் தக்க அறிவுரையை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்கள் வழங்க வேண்டும்.
* பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமாக உள்ள சுகாதாரத்தைப் பேணிக் காப்பதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
* பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும். மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.
* பள்ளியில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்திடவும், உடைந்த நிலையில் உள்ள கழிவறைகளைச் சரிசெய்து மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைத்திட வேண்டும். * பள்ளியில் உடைந்த நிலையில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகளை சரிசெய்திட வேண்டும்.
* மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு குடிநீர் குழாய், கழிவறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பறைகள் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் குறைவாக இருந்தால், கோடை விடுமுறையில் தேவையான எண்ணிக்கையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கைகழுவும் குழாய்கள் போதுமான எண்ணிக்கையில், இடவசதியுடன், போதுமான உயரத்தில் அமைத்திட வேண்டும்.
* பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சுகாதாரம் எந்ததளவிற்கு முக்கியமோ, அதற்கு இணையாக அவர்களின் பாதுகாப்பும் அவசியமாகும்.
* பள்ளி வளாகத்தில் புதர், கற்குவியல்கள் மற்றும் கழிவுப் பொருட்களின் குவியல்கள் இல்லாதவாறு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் பள்ளம் ஏதேனும் இருந்தால் அவற்றை மூடி சரிசெய்தல் வேண்டும்.
* கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கழிவு நீர்த் தொட்டி ஆகியவை முறையாக மூடப்பட்டு, அதனை பூட்டி வைத்திருக்க வேண்டும்.
* பள்ளியில் உள்ள மின் இணைப்புகளை பராமரித்து அவற்றை மாணவர்கள் அணுகாதவாறு பாதுகாப்பான முறையில் மூடிவைத்திட ஏற்பாடுகள் செய்திடல் வேண்டும்.
* வகுப்பறைகளில் பழுதடைந்த நிலையில் மின்விசிறி மற்றும் விளக்குகள் இருப்பின் அதனை மாற்றி புதிய பேன் மற்றும் லைட் பொருத்தப்பட வேண்டும்.
* பள்ளியில் உள்ள தீயணைப்பான் சாதனங்களை சோதனை செய்து காலாவதியாகியிருப்பின் உடன் புதுப்பிக்க வேண்டும்.
* பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு தீயணைப்பான் சாதனங்களை பயன்படுத்திட பயிற்சி வகுப்புகள் நடத்திட வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் காய்ந்த (அல்லது) பட்டுபோன மரங்கள் இருப்பின் அதனை உரிய அனுமதி பெற்று அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பள்ளிக் கட்டிடங்களின் மேற்கூரைகளில் எவ்வித பழுதும் இல்லாமல் இருக்க வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டிடங்களுக்கும் வெள்ளை பூசிட வேண்டும்.
* பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளும் போதுமான மின்விசிறி மற்றும் மின் விளக்குகள் அமைத்திடல் வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் மற்றும் பள்ளி வகுப்பறைகளில் எவ்வித விஷ ஜந்துக்களும் நுழைந்திடாத வண்ணம் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும்.
* பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் மாணவர்களுக்கு போதுமான இருக்கை வசதி செய்திடல் வேண்டும். மேலும், மாணவர்களின் இருக்கை மற்றும் மேஜையின் முனை கூர்மையாக இருந்திடல் கூடாது.
* வகுப்பறைகளின் கதவு, ஜன்னல்களை ஆய்வு செய்து மராமத்து பணிகள் செய்து நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* பள்ளிக்கு பேருந்துகளில் அழைத்து வரும் மாணவர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும்.
* கோடை விடுமுறையில் போக்குவரத்துத் துறையால் மேற்கொள்ளப்படும் ஆய்வில் அனைத்து பள்ளி வாகனங்களையும் முன்னிலைப்படுத்தி தரச்சான்று பெறப்பட வேண்டும். அவ்வாறு தரச்சான்று பெறாத வாகனங்களை இயக்க கூடாது.
* பள்ளியில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் தரச்சான்று நடப்பில் உள்ளதை உறுதி செய்திடல் வேண்டும். பள்ளி வாகனங்களில் இருக்கை வசதிகள் சரியான முறையில் இருந்திடல் வேண்டும்.
* பள்ளி வாகன ஓட்டுநர் மற்றும் வாகன பராமரிப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி மாணவர்களை பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள அறிவுறுத்திட வேண்டும்.
* பள்ளி திறக்கும் நாளுக்கும் முன்னரே ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு சுற்றறிக்கைகளை பள்ளி முதல்வர் விளக்கமாக தெரிவிக்க வேண்டும் இவ்வாறு கண்ணப்பன் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...