Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ்-2 தேர்வுகளில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டது ஏன்? பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி வருமாறு:-

கடந்த 1.3.18 முதல் 6.4.18 வரை எழுதப்பட்ட பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை ஒரு ஆண்டுக்கு முன்பே அறிவித்திருந்தோம். அதன்படி அதே தேதியில் (நேற்று) தேர்வு முடிவுகளை வெளியிடுகிறோம்.


தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசின் சார்பில் வாழ்த்துகள். அவர்கள் பல்வேறு துறைகளில் சென்று மேல்நிலைக் கல்வி கற்க அரசு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தோல்வியுற்றவர்கள் யாரும் துவண்டுபோக வேண்டாம். அவர்களுக்காக ஹெல்ப் லைன் என்ற புதிய திட்டம் உள்ளது. 14417 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டால், ஆறுதல் பெறக்கூடிய வகையில், மீண்டும் கல்வி கற்பதற்கு ஏற்ற ஆலோசனை வழங்கப்படும்.

ஜூன் 25-ந் தேதி அவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம். வெற்றி பெற்ற மாணவர்களுடன் அவர்களும் கல்லூரியில் சேர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாடப் பிரிவு வாரியாக மாணவர்களின் தேர்ச்சி வீதத்தை பொறுத்த அளவில், அறிவியல் பாடப்பிரிவில் 92.2 சதவீதம், வணிக பாடப்பிரிவில் 87.4 சதவீதம், கலைப் பாடப் பிரிவுகளில் 79.6, தொழில் பாடப்பிரிவுகள் 80.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாடவாரியாக, இயற்பியல் 96.4 சதவீதம், வேதியியல் 95, உயிரியல் 96.3, கணிதம் 96.1, தாவரவியல் 93.9, விலங்கியல் 91.9, கணினி அறிவியல் 96.1, வணிகவியல் 90.3, கணக்குப் பதிவியலில் 91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த முறை கஷ்டமான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்ததாக மாணவர்கள் தரப்பில் இருந்து கருத்து கூறப்பட்டது. இது எதற்காக என்றால், எதிர்காலத்தில் மாணவர்கள் பல்வேறு பொதுத் தேர்வுகளை சந்திக்க வேண்டியதுள்ளது.

இந்தத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள்கூட அண்ணா பல்கலைக்கழகத்தில் கணிதப் பாடத்தில் 21 சதவீதம் பேர் அரியர்ஸ் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுபோன்ற நிலை நீடிக்கக்கூடாது. எனவேதான் கேள்விகள் கடினமாக வைக்கப்பட்டன.

இந்தப் புதிய முறைப்படி எதிர்காலத்தில் பொதுத் தேர்வுகளை இங்குள்ள மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள முடியும்.

மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் முதல், இரண்டாம் ரேங்க் பற்றி விளம்பரப்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மன அழுத்தத்தை தரக்கூடாது என்பதற்காக இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒரு மார்க் குறைந்துவிட்டால்கூட, அந்த மாணவனும் அவரது பெற்றோரும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இன்னும் ஒரு மார்க் வாங்கியிருந்தால் ரேங்க் கூடியிருக்குமே என்றெல்லாம் மற்றவர்கள் கூறி மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கும் நிலை உள்ளது.

இதை நிறுத்தவே ரேங்க் முறையை தவிர்த்திருக்கிறோம். பெற்றோர், கல்வியாளர்கள், மாணவர்கள் இதை பாராட்டியுள்ளனர். எல்லோரையும் சமநிலைப்படுத்தி பாடத்தை கற்றுத் தருவதுதான் அரசின் நோக்கம்.

இதுவரை எந்தப் பள்ளியும் தங்களை முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்யவில்லை. விளம்பரம் செய்தால் அந்தப் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்படும். மீண்டும் அதைச் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்விக் கட்டணத்தைப் பொறுத்த அளவில் ஒவ்வொரு பள்ளிகளிலும் பெயர்ப் பலகை வைத்து, கல்விக் கட்டணத்தின் அளவு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இனி தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்காது. பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலர் திடீரென்று சொந்த மாவட்டங்களுக்கு பணிமாறுதல் பெற்றுவிட்டதால் வடமாவட்டங்களில் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது.

அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி வீதம், கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கூறுவதை ஒப்புக்கொள்கிறேன். இனி அந்த நிலை நீடிக்கக்கூடாது என்பதற்காக ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியோருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே கிராமங்களில் உள்ள மாணவர்களை அரசுப் பள்ளிகளுக்கு அழைத்து வரவேண்டும். இதற்கான காலவரம்பு செப்டம்பர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளியில் பணியாற்ற விரும்பினால் கூடுதலாக மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் ஏழை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதை தமிழக அரசும் மத்திய நிதியைப் பயன்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளியில் சேர வருபவர்களை தனியார் பள்ளிக்கு அனுப்பும் நிலை இல்லை.

சில இடங்களில் குறைபாடுகள் இருக்கின்றன. குறிப்பிட்ட சில பள்ளிக்கூடங்களில் அனுமதி வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. அதுபோன்ற 12 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ஆய்வு நடத்தி வருகிறோம். அருகில் வசிக்கும் ஏழை மாணவர்களை ஏன் பள்ளிகளில் சேர்க்கவில்லை என்று அவர்களிடம் கேள்வி எழுப்பி இருக்கிறோம். அவர்களின் பதில் வந்த பிறகுதான் உரிய விவரங்களை சொல்ல முடியும்.

இனிவரும் ஆண்டுகளில் அனைத்துப் பாடத்திட்டங்களையும் மாற்றிய பிறகு, தனியாரே வியக்கும் வகையில் அது இருக்கும். 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றியதை பார்த்த பிறகு, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை நடத்தும் தனியார் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகளை மூடும் நிலையை அரசு உருவாக்கி இருக்கிறதா என்றுகூட கேள்வி எழுப்பியுள்ளனர்.

அனைத்து பெற்றோர்களின் ஆசையும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ. கல்விதான். ஆங்கில அறிவை குழந்தைகள் பெறவேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகின்றனர். எனவே அந்தப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.

அதிலும் மாற்றத்தைக் கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது. இது அரசின் கொள்கை ரீதியான விஷயம். எனவே முதல்-அமைச்சர், அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.




1 Comments:

  1. வெற்று அறிவிப்புகள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive