அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.
கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு செய்து வருகிறது. சமச்சீர்
கல்வி, ஸ்மார்ட் வகுப்பறைகள், புதிய பாடத் திட்டம் உருவாக்கம், நீட்
தேர்வுக்கு பயிற்சி அரசு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் மாணவர்களின்
மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பது, மாணவர்களின்
மதிப்பெண்கள், மாணவர்களின் புகைப்படத்துடன் தனியார் பள்ளிகள் விளம்பரம்
பிரசுரிக்கக் கூடாது என்பது போன்று பல்வேறு புதிய நடைமுறைகள்
அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல பெரும்பாலான அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி கடந்த 2013
- 2014-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதல் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி
தொடங்கப்பட்டு, ஆண்டுதோறும் படிப்படியாக 5-ஆம் வகுப்பு வரையில் ஆங்கில
வழிக்கல்வி தொடங்கப்பட்டு முடிவடைந்துள்ளது.
ஆனால் ஆங்கில வழிக்கல்வி கற்பிக்க அரசு தொடக்கப் பள்ளிகளில் தனியாக
ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழ் வழிக் கல்வியை போதிக்கும்
ஆசிரியர்களே ஆங்கில வழிக் கல்வியையும் போதிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆங்கில
வழிக்கல்வி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறி ஆங்கில வழிக்
கல்வியை போதிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
அதனால் ஒரே ஆசிரியரே தமிழ், ஆங்கில வழிக் கல்வியை போதிக்க வேண்டியிருப்பதால் கல்வித் தரம் குறைய வாய்ப்புள்ளது.
தற்போது 5-ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியை படித்து முடித்த மாணவர்கள்
2018 - 2019-ஆம் கல்வி ஆண்டில் 6-ஆம் வகுப்பு செல்ல இருக்கின்றனர்.
ஜூன் மாதத்தில் 6-ஆம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 6-ஆம்
வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி போதிக்கப்படுமா என்ற சந்தேகம் பெற்றோர்களிடையே
எழுந்துள்ளது. ஆனால் அதுகுறித்து தமிழக அரசின் கல்வித் துறையிடமிருந்து
அறிவிப்போ, உத்தரவோ ஏதும் இதுவரை வரவில்லையென ஆங்கில வழிக் கல்வி நடைமுறைப்
படுத்தப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
5-ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி முடித்த மாணவர்கள் வரும் கல்வியாண்டில்
6-ஆம் வகுப்பில் தமிழ் வழிக் கல்வியில் சேருவதா அல்லது ஆங்கில வழிக்
கல்வியில் சேருவதா என்ற குழப்பம் நிலவுகிறது. 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழிக்
கல்வி குறித்த கல்வித் துறையின் அறிவிப்பு இதுவரை வராததால் குழப்பம்
நீடிக்கின்றது.
6-ஆம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி இல்லையெனில்
5-ஆம் வகுப்பு வரையில் ஆங்கில வழிக்கல்வி முடித்த மாணவர்கள் 6-ஆம்
வகுப்பில் தமிழ் வழிக் கல்விக்கு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால்
அந்த மாணவரின் கல்வி பாதிக்கப்படும்.
எனவே வருகிற கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி
நடைமுறைபடுத்தப்படுமா, அதற்கென தனியாக ஆங்கில வழிக்கல்வி போதிக்கும்
ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களா என்பதை கல்வித்துறை உடனடியாக
தெளிவுப்படுத்த அறிவிப்பு அல்லது அரசாணை வெளியிட வேண்டும் என எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...